பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சொகுசு பங்களா, கல்வி நிலையங்கள், கோயில், மசூதி என அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆசிரமம் நடத்திவருபவர் 72 வயதாகும் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். கையை உயர்த்தியபடி டான்ஸ் ஆடுவதே சிவசங்கர் பாபாவின் ஸ்டைல். அதனால் இவரை ‘டான்ஸ்’ சாமியார் என்று பக்தர்கள் அழைப்பதுண்டு. மேலும் இவருக்கு இந்தியா முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்திலேயே குறைந்த கல்விக் கட்டணம் வசூலித்ததால், சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில், பாபாவின் பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் தங்களின் குழந்தைகளைச் சேர்த்தனர். பாபாவின் பக்தர்கள்தான் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவந்தனர்.  சென்னை கே.கே.நகர், பி.எஸ்.பி.பி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் வரத் தொடங்கின. அவற்றில் சிவசங்கர் பாபா நடத்திய சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளும், சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சிவசங்கர் பாபா ‘ஆசீர்வாதம்’ என்ற பெயரில் தங்களுக்கு முத்தம் கொடுத்ததாகவும், தங்களைக் கட்டிப்பிடித்ததாகவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகள் சிலர் புகாரளித்தனர். அதன்பேரில் சிவசங்கர் பாபா, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட எட்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார். உடனடியாக சிவசங்கர் பாபா தொடர்பான வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ஒப்படைத்தனர். விசாரணை அதிகாரிகளாக டி.எஸ்.பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோரை நியமித்து டிஜிபி ஷகில்அக்தர் உத்தரவிட்டார். எஸ்.பி விஜயகுமார் மேற்பார்வையில் சிவசங்கர் பாபாவின் வழக்கை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை கடந்த 13-ம் தேதி கையில் எடுத்த டி.எஸ்.பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீஸார் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால், கேளம்பாக்கம் ஆசிரமத்தில் பாபா இல்லை என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் எங்கு சென்றிருக்கிறார் என்ற விவரத்தை போலீஸார் சேகரித்தனர். அப்போது சிவசங்கர் பாபா, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸார் விமானம் மூலம் அங்கு சென்றனர். மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது சிவசங்கர் பாபா அங்கு இல்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸார் வருவதையறிந்த சிவசங்கர் பாபா தலைமறைவாகிவிட்டதால், அவரை வடமாநிலத்திலுள்ள தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூலம் தேடத் தொடங்கினர். அப்போதுதான் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஒருவரின் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அவரிடம் சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறியதோடு, பாபாவை உடனடியாகச் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும் கூறினர்.  அதை உண்மையென நம்பிய சிவசங்கர் பாபாவுக்கு அடைக்கலம் கொடுத்தவர், பாபாவைச் சந்திக்க டெல்லியில் ஏற்பாடு செய்தார். சிவசங்கர் பாபா,டெல்லியிலுள்ள சித்தரஞ்சன் பூங்கா அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் தகவல் தெரிந்ததும், டி.எஸ்.பி குணவர்மன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றனர். அப்போது பக்தர்கள் வேடத்தில் சென்ற போலீஸார் முதலில் சிவசங்கர் பாபாவைச் சந்தித்தனர். அடுத்த சில நிமிடங்களில் டி.எஸ்.பி குணவர்மன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பாபாவிடம் விவரத்தைக் கூறினர். விடுதிக்குள் பக்தர் வேடத்தில் போலீஸார் வந்தது அப்போதுதான் பாபாவின் டெல்லி பக்தருக்குத் தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் சிவசங்கர் பாபா அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை போலீஸார் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு விமானம் மூலம் நேற்றிரவு அழைத்துவந்தனர்.