நட்சத்திர நடிகர் நடிகையரிடையே புதிதாக ஒரு ஜோடி இணையும்போது ரசிகர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்புதானே! ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை ஒன்றில், அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்த புதிய ஜோடியுடன் களம் இறங்கியிருக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கும் படக்குழு, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
இது குறித்து பேசும்போது, முதல் கட்ட படப்பிடிப்பை நாங்கள் இருபது நாட்கள்தான் நடத்தினோம் என்றாலும், இதிலேயே கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பை முடித்து விட்டோம். சென்னை புறநகர் பகுதியான நீலாங்கரையில் பிரத்யேகமாக ஒரு அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். மேலும் புதுப்பேட்டை பகுதியில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறோம். ஏராளமான பொதுமக்கள் மத்தியில் நடைபெறும் இந்த சண்டைக் காட்சியை நான்கு நாட்களில் ஸ்டண்ட மாஸ்டர் செல்வா மிகச் சிறப்பாக படமாக்கிக் கொடுத்தார். நாயகன் அதர்வாவை டைரக்டர்ஸ் டிலைட் என்றால் மிகையாகாது. தன் நடிப்புத் திறனை அவர் மேம்படுத்தி வருவதை இந்தப் படப்பிடிப்பின்போது கண்கூடாகப் பார்த்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நான் வடிவமைத்த பாத்திரம் அவரது சிறப்பான நடிப்பால் படத்தில் முழுமையடைந்திருப்பதை நான் ரஷ் பிரதிகளைப் பார்க்கும்போது உணர்ந்தேன். அனுபாமா பரமேஸ்வரன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். கிட்டத்தட்ட 96 படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது இது. அனுபாமாவின் அப்பா வேடத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். நகைச்சுவையாகவும், உண்ர்வுபூர்வமாகவும் நடிக்க வேண்டிய இந்த பாத்திரத்தை தன் இயல்பான நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார். இதேபோல் காளி வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்திருக்கின்றனர். காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடத்திய படப்படிப்புதான் சாவாலாக இருந்தது என்றாலும், அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும். 96 படம் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் கேமராவைக் கையாள, கபிலன் வைரமுத்து வசனங்களை தீட்டுகிறார். ராஜ் குமார் கலை இயக்குநர் பொறுப்பு ஏற்க, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். உடை வடிவமைப்பாளராக ஜே.கவிதாவும் நடன இயக்குநராக சதீஷும் பொறுப்பேற்றிருக்கின்றனர். ராஜ் ஸ்ரீதர் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று உள்ளார். திரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி. புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகெங்கும் இப்படம் திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.