ஏழை எளிய மற்றும் மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொண்டாற்றும் நடிகர் சூர்யா

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா பேசியதாவது, “2006-ல இருந்து 20 வருஷம் வந்துட்டோம். 2006-இல் 10 X 10 அளவில் சிறிய அறையில் ஆரம்பித்தது அகரம் பயணம். 2010-இல் விதைத் திட்டம் ஆரம்பித்தோம். நூறு மாணவ, மாணவியரை படிக்க வைக்க ஆசைப்பட்டோம், அப்பவும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்தது. 15 ஆண்டுகள் கடந்து இன்று 700 மாணவ மாணவியரை படிக்க வைக்கிறோம். இப்பவும் பத்தாயிரம் விண்ணப்பம் வருகிறது. 2006-இல் தொடங்கும் போதும் இப்ப 2025-லையும் தேவை மாறவே இல்லை. இன்னும் நிறைய பேர்த்தோட அன்பு தேவைப்படுகிறது. ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக நேரங்கள் வழங்க கூடிய தன்னார்வலர்கள் தேவைப்படுறாங்க. 

அகரம் பவுண்டேஷனுக்கு என தனித்துவமான அலுவலக கட்டிடம் திறக்கப்படுவது நிறைவான விஷயமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்க உத்வேகமாக இந்த கட்டிடம் அமைந்திருக்கும். 20 வருஷத்தில அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு அனுபவம். இந்த குழந்தைகளுக்காக, அவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்கனுங்கறது என்னோட கனவும், ஆசையும் கூட. என்னால அதை பண்ண முடிந்ததில் சந்தோஷம். மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்ல, நல்ல மனங்களையும், நல்ல சிந்தனை உடையவர்களையும் ஒன்றினைக்கும். அதற்கான இடமாக இந்த இடம் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். அகரம் பயணத்திற்கு ஆதாரமாக இருப்பவர்கள் தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள். அனைவருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

விதைத் திட்டம் 5800 குழந்தைகள் கல்லூரி கல்விக்கு உறுதுணையா இருக்க முடிஞ்சிருக்கு. அவர்களில் 70% பெண் குழந்தைகள். இத்தனை குடும்பங்களில், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடிஞ்சிருக்கு. மேலும், ஜவ்வாது மலைகளில் உள்ள நமது பள்ளித் திட்டத்தின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக 6,000 மலைவாழ் மக்களின் கல்வி தொடர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எல்லாம் ஒத்த கருத்துடையவர்கள், விரிவான சிந்தனையாளர்கள், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டாளர்கள், அமைப்புகள் என முற்போக்கான சமூகத்தை உருவாக்க நினைக்கும் ஒவ்வொருத்தரோடும் இணைந்து பணியாற்ற அகரம் தயாரா இருக்கு. அதனோட ஒரு பகுதியா தான் இந்த கட்டிட திறப்பு விழாவோட ஒரு பயிற்சி பட்டறை, புத்தகங்கள் வெளியீடு மற்றும் வாசிப்பு நிகழ்வுகள் நடந்திட்டு இருக்கு. தொடர்ந்து இங்கு தினசரி இலவச ஆங்கில வகுப்புகள், மற்றும் அறிவுசார் நிகழ்வுகளுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் அகரம் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு பங்கு பெறலாம். ஒவ்வொரு வாரமும் அர்த்தமுள்ள உரையாடல்கள் இங்கு நடக்கும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் பங்கேற்கலாம். கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான ஒரு மையமாக இந்த இடம் தொடர்ந்து செயல்படும். புதிய தொடக்கம், புதிய நம்பிக்கை இன்னும் பெருசா சிந்திப்பதற்கான புத்துணர்ச்சி தரும் இடமாக இந்த கட்டிடம் அமைந்திருக்கு. இங்க இருந்து நிறைய புதிய விஷயங்கள் உருவாக தொடங்கும் என்று நம்புகிறேன். உங்கள் அன்பும், ஆதரவும் இல்லாமல் அகரம் செயல்கள் எதுவும் இல்லை. அதனை தொடர்ந்து தர கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சூர்யா பேசினார்