விஜய் நடிக்கும் “கோட்” படத்தின் அறிமுக நிகழ்வில் அதன் இயக்குநர் வெங்கட் பிரபு கூறும்போது ”என்னுடைய திரையுலக பயணத்தில் இது மறக்க முடியாத பயணம். இந்த படத்தின் பணிகள் எப்படி தொடங்கியது, எப்படி நிறைவடைந்தது என்றே தெரியவில்லை. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரை முதன்முதலாக சந்தித்து இந்த கதையை விவரித்தேன். அப்போது அவரும் ஆர்வமாகி இந்த படைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்க தொடங்கினார். பின்னர் விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு விஜய் – ஏஜிஎஸ் நிறுவனம் இருவரும் இணைந்தார்கள். கதையைக் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் அவர்கள், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைவது மிக்க மகிழ்ச்சி. செலவைப் பற்றி கவலைப்படாமல் உலகத் தரத்திலான படத்தை உருவாக்குங்கள் என்றார். இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் பெரிதாக யோசிக்கத் தொடங்கினேன். இந்தப் படம் ஒரு நேர்த்தியான, கமர்ஷியலான எண்டர்டெயின்மென்ட் படம். விஜய் சாரை இது போன்றதொரு கமர்சியலான படத்தில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமில்லாமல் கதையும் இருக்கிறது.********
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் 25வது படமாக ‘கோட்’ உருவாகி இருக்கிறது. தளபதி விஜய்யுடன் ‘பிகில்’ படத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. எங்கள் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம் இது. இப்படத்தின் பணிகள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றன. படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலுவான படைப்பு. ஏராளமான வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். விஜய் சார் நடிக்கும் படத்தில் அதிகளவு வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் இதுதான். இந்த தருணத்தில் படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்காக திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.