தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆரவ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஆஹா இணைய தளத்தில் வெளி வந்திருக்கும் படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. காவல்த்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் வரலட்சுமியின் நண்பரை, ஒரு ரவுடிக் கும்பல் கொலை செய்கிறது. அந்த ரவுடிக் கும்பலுக்கு காவல்த்துறை ஆய்வாளர் உடைந்தையாக இருக்கிறார். அதனால் ஆய்வாளரை காவல் நிலையத்திலேயே கொலை செய்ய வேண்டுமென்று வரலட்சுமி சரத்குமார் திட்டமிடுகிறார். வரலட்சுமி திட்டமிட்ட அதே நேரத்தில் காவல் நிலையத்திலேயே அந்த ஆய்வாளரை வேறு ஒருவர் கொலை செய்துவிடுகிறார். யார் அவர்? ஏன் கொலை செய்கிறார்? என்பதை எதிபாராத திருப்பு முனைகளைக் கொண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் நுனிப்பகுதிக்கு கொண்டு செல்கிறது. சலிப்பு தட்டவில்லை. படத்தின் பின் பகுதியில் காவல்த்துறை உதவி ஆணையாளராக வரும் ஆரவ், இன்னும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறார். வரலட்சுமியும் ஆரவ்வும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். ஆரவ்வின் வருகை தாமதமாக வந்தாலும் தரமாக இருக்கிறது. பின்னணி இசையின் வழித்தடத்தில் விறுவிறுப்பு காட்சிகள் நடைபோடுகிறது. **********