உழைப்போர் திருநாளாம் “மே’’ தினத்தை முன்னிட்டு அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி (29.10.2024), தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும்; போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 167 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000/- ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதியுதவியை, கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை வங்கிக் கணக்கில் இருந்து வரைவோலைகளாக வழங்கி, அனைவருக்கும் தன்னம்பிக்கையையும், ஆறுதலையும் கூறினார். தங்களுடைய குடும்பச் சூழ்நிலையை அறிந்து நிதியுதவி வழங்கிய கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி மு. பழனிசாமிக்கு, நிதியுதவியை பெற்றுக்கொண்ட தொழிலாளர்களும், மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய நிகழ்ச்சியை, கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் தொகுத்து வழங்கினார்.