அதிமுக வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இரண்டு தினங்களுக்கு முன்பாக மறைந்துவிட்டார். அதிமுக-வில் நீண்டகாலம் அவைத்தலைவர் பதவியை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்கு பிறகு அந்த இடத்தில் யாரை அமரவைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.கவில் குறிப்பிட்ட சில அதிகாரங்களை கொண்டுள்ள அவைத்தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்ததுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.கவில் உள்ள இரட்டை தலைமையால் கட்சிக்குள் காரம் அதிகமாக இருந்துவரும் நிலையில் அடுத்தகட்ட ஆட்டம் அவைத்தலைவர் பதவியை வைத்து ஆரம்பித்துள்ளது.
அவைத்தலைவர் ரேசில் நடப்பது என்ன? என்று அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “மதுசூதனனின் உடல்நிலை நலிவுற்றிருந்த போதே, அ.தி.மு.க தலைவர்கள் மத்தியில் அவைத்தலைவர் குறித்த பேச்சு எழுந்துவிட்டது. தற்போது அவைத்தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படக் காரணம், அ.தி.மு.க வின் இரட்டை இலை குறித்த வழக்கில் தேர்தல் ஆணையம் அவைத்தலைவர் இருக்கும் அணிக்கே சின்னத்தை வழங்கியது. அதே போல், பொதுக்குழு முதல் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாக கூட்டங்கள் அனைத்தும் அவைத்தலைவர் ஒப்புதல் பெற்றபின்பே நடக்கும்.
இப்போது அ.தி.மு.கவின் ஒற்றை தலைமையாக தன்னை நிலைநிறுத்தப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு அவைத்தலைவரின் ஆதரவு மிக முக்கியம். எனவே அவைத்தலைவர் பதவியை தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் வழங்கினால் எதிர்காலத்தில் தனக்கு சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார். மேலும், கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்களாக இருப்பது கூடுதல் தகுதியாக எடப்பாடி பார்க்கிறார். அவைத்தலைவர் பதவி என்பது கட்சியின் சீனியர்களாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பதவியாக இருக்கிறது.
இந்நிலையில் எடப்பாடியை விட அ.தி.மு.கவில் சீனியர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களில் இருவரை தனது சாய்ஸாக நினைத்துள்ளார். ஒருவர் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, அடுத்து முன்னாள் அமைச்சர் பொன்னையன். இந்த இருவருமே எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள். கட்சியிலும் சீனியர்கள் என்பதால் இவர்களை நியமிக்க எந்த இடையூறும் வராது என்று எடப்பாடி கணக்கு போடுகிறார். இவர்கள் இருவருமே கொங்கு சமூகத்தினர் என்பது எடப்பாடிக்கு கூடுதல் பலம்.
இந்நிலையில் எடப்பாடியின் எண்ணத்திற்கு மாறாக பன்னீரி்ன் திட்டம் இருக்கிறது என்கிறார்கள் பன்னீர் தரப்பினர். “அவைத்தலைவர் பதவியை பன்னீர் வசம் ஒப்படைத்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியில் தான் அமரலாம் என்று எடப்பாடி திட்டமிட்டார். ஆனால், கட்சியின் தலைமை பதவியிலிருந்து தான் விலகபோவதில்லை என்று பன்னீர் உறுதியாக சொல்லிவிட்டார். அதே போல் மதுசூதனன்- பன்னீர் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. எனவே அவைத்தலைவர் பதவி தன்னைவிட்டு போய்விடக்கூடாது என்பதில் பன்னீர் உறுதியாக இருக்கிறார். அவரும் கட்சியில் சீனியர்களான இருவரை இந்த பதவிக்கு பரிந்துரை செய்ய நினைக்கிறார். ஒருவர் தமிழ்மகன் உசேன், அல்லது அன்வர் ராஜா ஆகிய இருவரில் ஒருவரை அவைத்தலைவராக கொண்டுவரலாம் என்று எண்ணுகிறார்” என்கிறார்கள்.
இந்நிலையில் மதுசூதனன் வீட்டில் அஞ்சலி செலுத்தியப்பிறகு பன்னீர் தனக்கு நெருக்கமானவர்களுடன் தனது வீட்டில் பேசியுள்ளார். அப்போது “எடப்பாடி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார். கட்சியின் அவைத்தலைவர் பதவியையும் கொங்கு மண்டலத்து ஆளுக்கே கொடுத்தா இது என்ன கொங்கு கட்சியா?. இவர் பண்றது ஒண்ணும் சரியில்லை. என்னை கேட்காமல் அவர் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று கொந்தளித்துள்ளார். இதனால் அடுத்த சில நாட்களில் அ.தி.மு.க வின் அவைத்தலைவர் குறித்த ரேசில் அனல் பறக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க வினர்.*