நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்களின் நலனுக்காக முன்னிற்போம் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அல்லாத எந்தவொரு பெரிய கட்சிகளும், திரிபுராவில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவ பாசிச குண்டர்கள் நடத்தும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இவர்களின் இந்த அமைதி வேதனையாகவும், வருத்தமளிக்கும் வகையிலும் உள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பழிவாங்கல் நடவடிக்கையாக திரிபுராவில் நடத்தப்படும் வன்முறையை கண்டும் காணாமல் இந்த கட்சிகள் இருப்பது அவமானகரமானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற கட்சிகளின் பாசிச எதிர்ப்பு என்பது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு யுக்தி என்று நம்மால் உணர முடிகிறது. இந்துத்துவ அமைப்பினரின் முதல் குறியாக இருக்கும் முஸ்லிம்கள் மீது அவ்வமைப்பினர் நடத்தும் வன்முறைகளுக்கு எதிராக இந்த கட்சிகள் குரல் கொடுப்பது கிடையாது. மிகுந்த ஆபத்தான நிலையில் வலதுசாரி ஆட்சியின் கீழ் இருக்கும் முஸ்லிம்களின் இப்போதைய சூழலில் கூட, தங்களை பாசிச எதிர்ப்பு கட்சி என்று சொல்லிக்கொள்ளும் எந்த கட்சியும் திரிபுரா குறித்து எந்த வார்த்தையும் கூறக்கிடையாது. இவர்களை பொருத்தவரை முஸ்லிம்கள் வாக்கு வங்கிகள் மட்டுமே. இவர்கள் தேர்தல் சமயங்களில் முஸ்லிம்களை கவர்வதற்கு ஆசை வார்த்தைகள் அள்ளி வீசி பேசுவார்கள். ஆனால் அவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதரவாக குரல்களைக் கூட எழுப்ப முன்வருவதில்லை.
கடந்த வாரம் வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது அந்த நாட்டை சேர்ந்த முஸ்லிம் குழு ஒன்று இந்துக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பழிவாங்கல் நடவடிக்கையாகத் தான் திரிபுரா வன்முறை நடத்தப்படுகிறது. நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வங்கதேச அரசு மிக துரிதமாக நடவடிக்கையை எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அரசு இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். இம்மாதிரியான முன்னெடுப்புகள் தான் சமூகங்கள் மத்தியில் இணக்கமான உறவை உருவாக்கும். இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கும் வங்கதேசத்தின் நடவடிக்கை ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.
நாட்டில் உள்ள சிறுபான்மையினர்கள் அவர்கள் எந்த மதம், ஜாதி மற்றும் நம்பிக்கையில் இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் அரசின் கடமை. வங்கதேச அரசு அவர்களது நாட்டின் சிறுபான்மையினர் பக்கம் நின்று அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேளையில், இந்தியாவில் வன்முறை வெறியாட்டம் ஆடும் குற்றவாளிகள் பக்கமே அரசு நிற்கிறது, அவர்களை பாதுகாக்கிறது. இதை தவிர வேறொன்றையும் இந்துத்துவ அரசாங்கத்திடம் இருந்து எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், இந்த சூழலில் பாஜக அல்லாத கட்சிகள் இந்த வன்முறை சம்பவங்களை கண்டிக்க கூட முன்வராதது வேதனையளிக்கிறது. ஆகவே, திரிபுரா வன்முறை தொடர்பாக அம்மாநில அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் அழுத்தம் கொடுக்கக் கூட முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏ.கே.கரீம்.