அஜித்குமார், பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றி படங்களை உருவாக்கி ‘நட்சத்திர இயக்குநர் ’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவர் தனது பாலிவுட் பயணத்தைத் ‘ஷெர்ஷா’ படத்தில் இருந்து தொடங்கினார். அது பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை மறுக்க முடியாது. சல்மான் கானுடனான அவரது அடுத்த பெரிய படம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள ’நேசிப்பாயா’ என்ற அழகான காதல் கதையின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகிறார்.********
விஷ்ணு வர்தன் நாடு முழுவதும் உள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், அறிமுக நடிகரான ஆகாஷ் முரளியுடன் அவர் புதிய படத்தில் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் பகிர்ந்திருப்பதாவது, “நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன். ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர். மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.