உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசியதாவது:
ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன் ? அதற்காக நான் வரவில்லை.. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன்.********
கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரபபோகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது ? அந்த நபர் சொல்லும் போய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்கு புதிதா ? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது.
சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். கரு பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்தில் பாதிக்கிறது. என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள்.. நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்கலாக தீர்ப்பு எழுதாதீர்கள்.. கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டு தான் இங்கே வந்து நிற்கிறேன். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான் தான் நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளை கேட்டார்கள் என்பது உண்மைதான். ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியை கண்டுபிடிப்பது ?
இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.
எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது.. ? ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந் சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள்.. இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள்.. நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன்.. இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆத்துகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?
இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னை சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை. ஒரு மரத்தின் அருகில் வெடி சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டு கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள். அங்கேயும் நின்ருவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன்,
இந்த படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாபாவுக்கு நன்றி” என்று கூறினார்