ஏ.பி.பால்பாண்டி, சரவந்தி சைநாத் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டைக்கத்தி தினேஷ், காளி வெங்கட், பாலமுருகன், சுவாஷிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “லப்பர் பந்து”. கிராமத்தில் விளையாடும் மட்டைப் பந்தாட்டத்தை மைய்யக் கருவாக வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மனிதசாதி கலப்பு திருமணம், குடும்ப உறவு, விட்டுக்கொடுக்காத மனப்பான்மை எல்லாவற்றையும் கலந்து லப்பர் பந்தை செய்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. பந்தை மட்டையால் அடித்து வீசுவதில் வல்லவர் அட்டைக்கத்தி தினேஷ். பந்தை வீசுவதில் வல்லவர் ஹரிஷ் கல்யாண். இருவரும் எதிர் எதிர் அணியில் விளையாடுகிறார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை கொண்டவர்கள். இதற்கிடையில் அட்டைக் கத்தி தினேஷின் மகளை ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். இவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா? என்பதை திரையில் காணலாம். இளமை காலத்து நடிப்பையும் முதுமை காலத்து நடிப்பையும் அழகாக வேறுபடுத்தி நடித்திருக்கும் அட்டைக்கத்தி தினேஷ் பாராட்டுதலுக்குரியவர். உச்சக்கட்ட காட்சியிலும் முத்திரை பதித்திருக்கிறார் அட்டைக்கத்தி தினேஷ். பந்தாட்டத்க்தின் போது விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் தனது முகத்தில் அழகாக படரவிட்டிருக்கும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. கிராமத்தின் அழகை திரையில் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் தினேஷ் பாராட்டுக்குரியவர். ஹரிஷ் கல்யாணனின் நண்பர்களாக வரும் காளி வெங்கட்டும் பாலமுருகனும் அசால்ட்டாக தனது நடிப்பை வெளிபடுத்திருப்பது ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. மொத்தத்தில் கிராமத்து மட்டைப்பந்தாட்டக்காரர்களுக்கு லப்பர் பந்து விருந்தாக அமைந்திருக்கிறது.