அருளாளன்து, மற்றும் அருளாளன்து மாதேவ் ஆகியோரின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகிபாபு, ஏகன், சத்யாதேவி, ப்ரிஜிடா சகா, ஐஸ்வர்யா டுட்டா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கோழிப்பண்ணை செல்லத்துரை”. ஏகனும் சத்யாதேவியும் அண்ணன் தங்கை. இவர்களது தாய் வேறு ஒருவனுடன் ஓடி விடுகிறாள். தந்தை வேறு ஒருத்தியுடன் குடும்பம் நடத்துகிறார். அதனால் ஏகனும் சத்யாதேவியும் சிறு வயது முதல் அனாதைகளாகி விடுகிறார்கள். அனாதைகளாகிவிட்ட இருவரையும் கோழிப்பண்ணை நடத்திவரும் யோகிபாபு ஆதரித்து வளர்த்து வருகிறார். இருவர்களும் பெரியவர்களானதும் தங்களை அனாதைகளாக்கிய தாய் தந்தையை பழிக்குப் பழி வாங்கினார்களா? அல்லது அவர்களை மன்னித்து தங்களுடன் சேர்த்துக் கொண்டார்களா? என்பதுதான் கதை. நகைச்சுவை நடிகரான யோகிபாபுவை குணச்சித்ர நடிகராக்கியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. இது யோகிபாவுக்கு ஏற்றமா? அல்லது இறக்கமா? என்பதை அவரின் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சிறிதும் விரசமில்லாது குடும்பத்தினருடன் சென்று பார்த்து அழுதுவிட்டு வரும்படி திரைக்கதை நகர்கிறது. கதாநாயகன் ஏகன் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே சிரித்த முகத்துடன் வருகிறார். மற்றபடி படம் முழுக்க கடுகடுப்பான முகத்துடந்தான் காட்சி தருகிறார். இது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. உச்சக்கட்ட காட்சியில் பாசப்பிணைப்பை பக்குவமாக கையாண்டு பார்ப்பவர்களின் விழிகளில் நீர் ததும்ப வைத்துவிட்டார் சீனு ராமசாமி. தேனி மாவட்டத்தின் அழகை அட்டகாசமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ். பாடல்கள் அனைத்தும் ரசித்து கேட்கும்படி உள்ளது.