அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா தொகுப்பு பாடல் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. அந்த காணொளி தொகுப்பில் பாடலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசை அமைப்பாளர் அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். பாடலாசிரியர் அஸ்மின் வரிகளை எழுதியுள்ளார். கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுமதி குமாரசாமி தயாரித்துள்ளார். தினேஷ் வைரா இயக்கி உள்ளார். இவ்விழாவில் இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ராசய்யா பட இயக்குநர் ஆர். கண்ணன், நடிகர் காதல் சுகுமார், நடிகை காயத்ரி ஷாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.***********
அனைவரையும் வரவேற்ற இசை அமைப்பாளர் அருண் குமாரசாமி பேசும்போது, “நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம்.எனக்கு இசையில் பெரிய ஆர்வமும் ஈடுபடும் உண்டு. 35 ஆண்டு காலமாக நான் அதில் ஈடுபட்டு வருகிறேன். இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசைக் கச்சேரியில் கூட நான் பங்கேற்று இருக்கிறேன். கலைப்பணியில் தமிழ்நாட்டுடன் இணைந்து செய்யும் நோக்கத்தில் இந்த முயற்சியைத் தொடங்கி இருக்கிறோம். கம் லீப் என்பது ஆஸ்திரேலியாவில் பூர்வ குடிகள் பயன்படுத்தும் ஓர் இசைக்கருவியாகும். ஒரு மரத்தின் இலையை வாயில் வைத்துக் கொண்டு அவர்கள் இசைப்பது அது. என் மனைவி சுமதி குமாரசாமியின் யோசனையின்படி, அதை அடையாளப்படுத்தும் வகையில் எங்கள் நிறுவனத்திற்கு அந்தப் பெயரை வைத்துள்ளோம். எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆல்பம் பாடல் ,வெப் சீரிஸ், திரைப்படம் என்று ஒவ்வொன்றாக உருவாக்கி வெளியிட இருக்கிறோம். திறமையும் ஆர்வம் உள்ளவர்களை வரவேற்கிறோம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட ஒரு படத்தையும் எங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளோம் .அது எங்களால் தயாரிக்கப்பட்டது அல்ல என்றாலும் எங்கள் தளத்தில் வெளியிட்டுள்ளோம். தரமான படைப்புகளையும் படைப்பாளர்களை வரவேற்கிறோம் .எங்கள் முயற்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் .உங்களை நம்பி வந்திருக்கிறோம். கைவிட்டு விடாதீர்கள் .உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் தேவை “என்று பேசினார்.
இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்வின் பேச ஆரம்பித்ததும் தங்கள் நாட்டில் உள்ள நிலைமை பற்றி
‘அச்சமின்றி எழுந்து நின்றால்
அன்று முதல் விடுதலை…
துச்சமாக எண்ணுவோர்கள் துவைக்கிறார்கள் மக்களை..
குட்டுப்பட்டு குட்டுப்பட்டு
குனிந்து நிற்கும் பாடலை
எட்டுத்திக்கும் வெட்டித்தூக்க
எழுது பாரு பேரலை
துயர் ஏற்றுவோர்களை ஏமாற்றுவோர்களை
கொன்று தின்று ஆடும்பாரு
இராவணன் தலை
நம்பி நாங்கள் வாக்களித்த
அத்தனையும் தறுதலை..-வா
ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுப்போம்
தகுதியான ஒரு தலை’ என்று
ஒரு விடுதலை கீதத்தை இசைத்தார். பிறகு அவர் பேசும் போது,
” நான் சில தமிழ்ப் படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன் இப்போதும் எழுதி வருகிறேன்.இசை அமைப்பாளர் அருண்குமாரசாமி அவர்கள் இப்படிப் பாடல் முயற்சியில் ஈடுபட்ட போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தற்கொலைத் தடுப்பு பற்றி ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.அப்போது நான்
‘மலரலாம் மலர் உதிரலாம்; அது ,நதியிலே விழலாம்..
நேற்று மாலை மறைந்த நிலவு நாளை வான் வரலாம்..’ என்று ஒரு பாடலை எழுதினேன். அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பிறகு எஸ்பிபி அவர்களுக்காக எழுந்து வா இசையே என்று எழுதி ஒரு பாடல் இலங்கைக் கலைஞர்கள் சார்பில் உருவாக்கினோம். அது பெரிய வெற்றி பெற்றது. இந்த ஆல்பம் பாடல் வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி நன்றி” என்றார்.
நடிகை சாரா மோனு பேசும்போது, “இந்த பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் வெளியாகிறது.மூன்று மொழி வடிவங்களையும் பொறுமையாகப் பார்த்து ரசித்ததற்கு நன்றி. நான் ஆறு படங்களில் நடித்து முடித்துள்ளேன். சில வெளிவராமல் உள்ளன.நமக்கென ஒன்றும் சரியாக அமையவில்லை என்ற வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். எனக்கான ஒரு சரியான திருப்புமுனைக்காக காத்திருந்தபோது இந்த ஆல்பம் பாடலின் வாய்ப்பு வந்தது. சினிமாவில் இப்படி நடித்து வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்வார்கள். பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை மிகவும் சிரமமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் நான் இதில் நடித்த அனுபவத்தில் அப்படி உணரவில்லை. மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். அந்த அளவிற்குத் தயாரிப்பாளர் அருண்குமாரசாமி அவர்கள் எங்களை நடத்தினார். இயக்குநர் இந்தப் படப்பிடிப்பை காலை பத்துமணியிலிருந்து ஆறு மணி வரை என்று அழகாக திட்டமிட்டு நடத்தி முடித்தார்” என்றார்.
இயக்குநர் ராசய்யா படப் புகழ் ஆர் .கண்ணன் பேசும்போது. ”இசையமைப்பாளர் அருண் குமாரசாமி எங்களுக்கு குடும்ப நண்பராகிவிட்டார். அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி வாழ்த்தினார். இந்தப் பாடல் தொகுப்பின் இயக்குநர் வினேஷ் வைரா பேசும் போது, ”நான் இயக்கிய இந்த ‘ஒவ்வொன்றும் ஒரு விதம் ‘ படம் ஒரு சிறிய முயற்சியாக 2017-ல் முடிக்கப்பட்டது. அருண்குமாரசாமி அவர்களைச் சந்தித்தபோது இந்த தொகுப்பு பாடலை இயக்குவதற்கு முன் நான் இப்படி ஒரு படம் எடுத்து முடித்துள்ளேன் என்று சொன்னேன். அதைப் பார்க்காமலே எனக்கு இந்தப் பாடலை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.தரம் தான் முக்கியம் என்று கூறினார். அவர் படங்களைத் தங்களாகத் தயாரித்து உருவாக்கி வெளியிடவே விருப்பமாக இருந்தார். பிறகு என் படத்தை பார்த்துவிட்டு உள்ளடக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் தரம் நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் திருப்தியாக இல்லை என்று கூறினாலும் எனக்காக வெளியிட்டுள்ளார்.நான் மிகவும் எளிய முறையில் சிறிய பட்ஜெட்டில் எடுத்ததைக் கூறினேன். அவர் மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும். அவர் யாரைச் சந்தித்தாலும் யாரைப் பற்றியும் புகார் சொல்லாத ஒரு நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர். யாரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவார். என் மேல் நம்பிக்கை வைத்து இந்தப் பாடலை இயக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி” என்றார்.
நடிகர் காதல் சுகுமார் பேசும்போது, “வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது போல் சினிமா எடுத்துப் பார் என்றும் சொல்லலாம் . சினிமா எடுப்பது அவ்வளவு சிரமமானது .நான் 200 படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் சினிமாவின் வெற்றிக்கான சூட்சுமம் எனக்குப் புரியவில்லை. இப்போது ஏராளமான பேர் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள் வாக்காளர் அட்டை உள்ளவர்கள் எல்லாம் வாய்ப்பு தேடி வந்து விட்டார்கள்.அந்த அளவிற்குப் போட்டி நிறைந்ததாக இருக்கிறது சினிமா. எனவே தயாரிப்பாளர் அருண்குமாரசாமி அவர்கள் சினிமாவை நன்றாகத் தெரிந்து கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இங்கே அறிவுரை சொல்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் அதே போல தவறாக வழிகாட்டுபவர்கள் கூட இங்கு அதிகம். எனவே சரியான நபர்களைக் தேர்ந்தெடுத்து அவர் படம் எடுக்க வேண்டும் “என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, “இங்கு வந்திருக்கும் பேரரசு அவர்களை என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. நான் மூன்று நான்கு சின்ன படங்கள் இசையமைத்துப் பெரிதாக வளராமல் இருந்தபோது இமயமலை போல் ‘சிவகாசி ‘ பட வாய்ப்பு கொடுத்த அவர், எனக்கு காட்பாதர் போன்றவர். இங்கு வந்திருக்கும் இந்த ஆல்பம் பாடலை எழுதியிருக்கும் அஸ்வின் ஒரு பாடலைப் பெரிய அளவில் வெற்றிகரமாக ஆக்கி விடும் அளவிற்கு அவர் நன்றாக விளம்பரப்படுத்தி விடுபவர். தயாரிப்பாளர் அருண் குமாரசாமி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.
இயக்குநர் பேரரசு பேச ஆரம்பித்ததும் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபை உறுப்பினராக ஆகியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தார். பிறகு பேசும்போது, “திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு, சனியன் சகடை, பான்பராக் ரவி என்ற அந்த மூன்று வில்லன்கள் பாத்திரங்களில்
நடிப்பதற்கு ஆட்கள் தேடிய போது ,இரண்டு பாத்திரங்களுக்கு ஆட்களைப் பிடித்து விட்டோம். மூன்றாவது அந்த சனியன் சகடைக்கு மட்டும் ஆட்களைக் தேடிக் கொண்டிருந்தோம்.அந்த வில்லன் பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான பெரிய கனத்த உருவம் ஒன்று,ஒரு நாள் மாலை பிரசாத் லேபிலிருந்து எதிரே சாலையில் கடந்ததைத் தூரத்தில் நின்று பார்த்தேன். இவர்தான் சரியாக இருக்கும் என்று நான் உதவி இயக்குநர்களை விட்டு விசாரித்து வரச் சொன்னேன். போய்ப் பார்த்தால் அவர்தான் ஸ்ரீகாந்த் தேவா என்றார்கள். பதறிப் போய் விட்டேன்.அப்படிப்பட்ட உருவத்துக்குச் சொந்தக்காரர் அவர். பிறகுதான் ‘சிவகாசி’ படத்தில் அவரை இசையமைப்பாளராகத் தேர்வு செய்தேன். அந்தப் படத்தில் வரும் என்னத்த சொல்வேனுங்க, கோடம்பாக்கம் ஏரியா பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. பழனி படத்திற்கு பழனி மலை அடிவாரத்தில் தங்கியும் திருவண்ணாமலை படத்திற்கு கிரிவலப் பாதையில் ஓரிடத்தில் தங்கியும் பாடல்களை உருவாக்கினோம் .அப்போது அடுத்து வெளிநாட்டின் பெயராக வையுங்கள், வெளிநாடு செல்லலாம் என்று கூறினார். இங்கே இந்தப் பாடல் ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியே தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழாவாகவும் இருக்கிறது. இங்கே வந்துள்ள தயாரிப்பாளர் இசையமைப்பாளர் அருண் குமாரசாமி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தாலும் அவர் இலங்கைக் காரர் .அவரை வரவேற்போம். இலங்கைத் தமிழர்கள் தான் நல்ல சுத்தமான தமிழைப் பேசித் தமிழைக் காப்பாற்றுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம். கண்டிப்பாக அங்கே இன்றுள்ள நிலைமைகள் மாறும். அங்குள்ள நெருக்கடி நிலை மாறும்.அங்குள்ள மக்களை சிங்களர், தமிழர் என்று பார்க்காமல் அதையும் தாண்டி இலங்கையில் உள்ள மனிதர்கள் என்று காப்பாற்ற இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் வந்தாரை வாழவைக்கும். தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ தமிழர்கள் வந்தாரை வாழவைப்பவர்கள்.அதேபோலத் தமிழர்கள் ஆள்கிறார்களோ இல்லையோ வந்தாரை ஆளவைப்பவர்கள். எனவே தமிழர்களாகிய இவர்களையும் வரவேற்று வாழ்த்துவோம்” என்று இயக்குநர் பேரரசு பேசினார் . இந்த விழாவை நடிகர் ‘நண்டு’ ஜெகன் தொகுத்து வழங்கினார்.
மக்கள் தொடர்பு: சக்தி சரவணன்