தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று காலை சென்னையில் மறைந்த தில்லி பாபு அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொள்ளும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார். ********
நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி, “தில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு வருடங்களாக அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. வெயில், மழை, கொரோனா என எது வந்தாலும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகை போட்டு விடுவார். எனக்கு மட்டுமல்ல, எல்லோரிடமும் இன்முகத்தோடு இருப்பார். அவரது நல்ல குணங்களை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவஞ்சலி. வெற்றிப் படம், தோல்விப் படம் என்றில்லாமல் எல்லாப் படங்களுக்கும் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். மிகச்சிறந்த மனிதர். அவரது புகழ் நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்” என்றார்.