பி.ஜெகதீஸ் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வரியா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன், சரண், கீதா கைலாசம் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மெட்ராஸ்காரன்”. மெட்ராசிலிருந்து ஷான் நிகாம் தனது திருமணத்திற்காக புதுக்கோட்டைக்கு வருகிறார். மணப்பெண் நிஹாரிகாவும் புதுக்கோட்டைக்கு வந்து ஒரு விடுதியில் தங்குகிறாள். நிஹாரிஹாவை பார்க்க ஷாம் நிகாம் காரில் விடுதிக்கு செல்கிறார். செல்லும் வழியில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கலையரசனின் மனைவி ஐஸ்வரியா தத்தா மீது கார் இடித்துவிடுகிறது. இந்த விபத்தில் வயிற்றிலிருக்கும் குழந்தை இறந்துவிடுகிறது. குழந்தை இறப்புக்கு நான்தான் காரணம் என்று நீதிமன்றத்தில் ஷாம் நிகாம் கூறுகிறார். அதனால் நீதிபதி அவருக்கு இரண்டு வருட சிறைதண்டணை விதிக்கிறார். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்த ஷாம் நிகாமுக்கு, குழந்தை இறந்ததிற்கு தான் காரணம் இல்லை என்று தெரியவருகிறது. அப்படியானால் குழந்தை இறந்ததிற்கு யார் காரணம்? நின்று போன திருமணம் என்னானது?. என்பதுதான் கதை. படத்தின் ஆரம்பத்தில் திருமண வீட்டில் உறவுக்காரர்களின் வருகையும் உரையாடல்களும் கலகலப்பாகவும் குதுகலமாகவும் இருக்கிறது. திருமணம் தங்குதடையின்றி நடந்தேற வேண்டுமே என்ற தவிப்பை தந்தையாக நடித்திருக்க்ம் பாண்டியராஜனின் நடிப்பில் காணமுடிகிறது. அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார். மாப்பிள்ளைக்கு தாய்மாமனாக வரும் கருணாஸ் முகத்தில் சந்தோஷத்தையும் தவிப்பையும் சரிசமமாக வெளிப்படுத்தி இயல்பாக நடித்து கைத்தட்டல பெறுகிறார். கதாநாயகன் ஷாம் நிகாம் நீதிக்காகவும் மனிதாபிமானத்திற்க்காகவும் போராடும் காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். கலையரசன் வரும் காட்சிகள் அனைத்தும் முக இறுக்கத்துடனே காணப்பட்டாலும் இறுகிய முகத்திலும் ஈரம் இருப்பதை காணமுடிகிறது. அப்படியொரு நடிப்பை தந்துள்ளார். யதார்த்தமான சண்டைக் காட்சிகளை திரையில் காட்டியிருக்கும் சண்டை இயக்குநர் தினேஷ் சுப்பராயன் பாராட்டுதலுக்குறியவர். கேட்டு ரசிக்கும்படியான இசையை தந்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ். படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக நின்றுள்ளார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் திருமண வீட்டின் நிகழ்வுகளை ரசிக்கும்படி படம்பிடித்திருக்கிறார். குடுபம்பத்தினருடன் சென்று பார்க்கும் படத்தை தந்த இயக்குநர் வாலி மோகன்தாஸ் பாராட்டுதலுக்குறியவர். மதிப்பீடு 5க்கு 3.5