பரத்வாஜ் முரளிகிருஷ்ணன் தயாரிப்பில் சோச்கி இயக்கத்தில் சதிஷ், அஜய்ராய், பவல் நவகேதன், மைம் கோபி, ரித்திகா, வித்யா பிரதீப் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சட்டம் என் கையில்”. ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரத்தில் சதீஷ் வேகமாக ஓட்டிவந்த காரும், எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து நடக்கிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் இறந்து விடுகிறார். பிணத்தை கார் டிக்கியில் வைத்துக் கொண்டு வேகமாக காரை ஓட்டி செல்கிறார் சதீஷ். இதனால் போகுவரத்து காவலருக்கும் சதீஷுக்கும் நடந்த வாய்தகறாரில் சதீஷ் காவலரை அடித்து விடுகிறார். அதனால் பிணம் இருக்கும் காரோடு சதீஷை காவல் நிலையத்தில் வைத்து விடுகிறார்கள். காருக்குள் பிணம் இருப்பது காவலர்களுக்கு தெரியாது. இதற்கிடையில் இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட சாலையில் ஒரு பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அந்த பெண் யார்? கொலை செய்தது யார்?. கார் விபத்தில் பலியானவர் யார்?, காவல் நிலைத்த்திலிருக்கும் சதீஷ் விடுதலையானாரா? என்பதுதான் கதை. படம் ஆரம்பம் முதல் முடிவுவரை ஒவ்வோரு கட்டமும் ரசிக்கும்படி விறுவிறுப்பாக கதையை ஓட்டியிருக்கிறார் இயக்குநர். அச்சத்க்த்கையும் ஆச்சரியத்தையும் முகத்தில் இயல்பாக படரவிட்டிருக்கிறார் சதீஷ். அவரின் நடிப்பு அருமை. “பாட்ஷா” என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தமிழ் திரையுலகில் வலம் வருவார். வில்லத்தனத்திற்கேற்ற முகம். நடிப்பும் பிரமாதம். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதும் கொலையாளி யார் என்பதும் படத்தின் இடைவேளைக்கு முன்பே யூகிக்க முடிவதால், திரைக்கதையின் விறுவிறுப்பான ஓட்டத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறது. ஆனால் உச்சக்கட்ட காட்சியில் ரசிகர்களின் யூகம் தவறாகிவிடுகிறது. யாரும் எதிர்பாராத திருப்பத்தை தந்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்.