*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்.

தன்னலம் கருதாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும், பெண்கள், முதியோர்கள் பாதுகாப்புக்காக தனிக்கவனம் செலுத்தியும், கொடிய கொரோனா தொற்று காலத்திலும் இரவு, பகல் பாராது தீவிர மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். மேலும், காவல்
ஆளிநர்களின் குடும்ப நலனுக்காக, காவல் ஆளிநர்கள் குடும்பத்தில் பள்ளிபடிப்பு முடித்த மாணவ, மாணவியர்க்கு விருப்பப்பாட பிரிவில் விரும்பிய கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி, பள்ளி, கல்லூரி கல்வி கட்டணத்திற்கான உதவித் தொகை, படித்து முடித்த காவல் வாரிசுகளுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பல தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று பணிநியமன ஆணைகள் வழங்குதல், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக காவல் குடியிருப்பு பகுதிகளில் சமுதாயநலக் கூடங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இணையதளம் வழியாக பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நடைபெற்று வரும் சூழ்நிலையில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் வாரிசுகளில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது கல்விக்கு மேலும் உறுதுணை யாகவும், விரும்பும் தொழிற்படிப்புக்கான கல்விக்கு ஆயத்தமாக BYJU’S என்ற இணையவழி கல்வி பயிலும் செல்போன் செயலியை கட்டணமின்றி வழங்க காவல் ஆணையாளர் அவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்பேரில், மேற்படி செல்போன் செயலி நிறுவனமும், கொரோனா பணியில் முன்கள வீரர்களான காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு இச்சேவையை கட்டணமின்றி வழங்க முன்வந்தது. BYJU’S வகுப்புகள் கணிதம், அறிவியல், ஆங்கிலம் படிப்பு களுக்கு தலா ரூ.2,000/- வீதம் மாதம் 6000/- ரூபாய் மதிப்புடைய கல்வி செயலியை 1,600 காவலர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பு பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பேரில், 21.12.2020 அன்று காலை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் 1,600 குழந்தைகளுக்கு கட்டணமின்றி இணைய வழி கல்வி வழங்கும் BYJU’S செல்போன் செயலியை வழங்கும் அடையாளமாக, 30 மாணவ, மாணவிகளுக்கு BYJU’S செல்போன் செயலியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், BYJU’S செல்போன் செயலி நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆதேஷ் சிங் சட்டா, உதவி துணைத்தலைவர் திரு.சரத், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்), முனைவர் ஏ.அமல்ராஜ், துணை ஆணை யாளர்கள் P.சாமிநாதன், (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை), பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்), கே.ஶ்ரீதர்பாபு (நுண்ணறிவுப்பிரிவு), Kசௌந்தர்ராஜன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.