“சூது கவ்வும் 2” திரைப்பட விமர்சனம்

சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் மிர்சி சிவா, வாகை சந்திரசேகர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், அருள்தாஸ், கவி. கல்கி, ஹரிஷா ஜஸ்டின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சூது கவ்வும. 2”. நேர்மையான முதலமைச்சராக இருக்கும் வாகை சந்திரசேகர் 1970 ஆம் ஆண்டு கோமாவில் படுத்தபடுக்கையாக இருக்கிறார். 2023ல் கண்விழித்து பார்க்கும்போது தன் கட்சியிலுள்ள ராதாரவி மக்களை ஏமாற்றி முதலமைச்சராக இருக்கிறார். நிதியமைச்சராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் கருணாகரன் பல ஆயிரம் கோடிக்கணக்கான பணத்தை ஒரு வங்கியில் போட்டு வைத்திருக்கிறார். அதை தேர்தல் நேரத்தில் பட்டுவாடா செய்ய ஒரு கருவியையும் வைத்திருக்கிறார். அந்த கருவி மூலம்தான் பணத்தை எடுக்க முடியும். அந்த கருவி களவு போய்விடுகிறது. அதே நேரத்தில் முன்பகை காரணமாக கருணாகரனை மிர்சி சிவா கடத்தி போய்விடுகிறார். வாகை சந்திரசேகர் ஒரு புதுக்கட்சி ஆரம்பித்து தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார். எதிரணியில் ராதாரவி போட்டியிடுகிறார். களவு போன கருவி கிடைத்ததா?. யார் மீண்டும் முதலமைச்சராக ஆனார்கள். கடத்தப்பட்ட கருணாகரனின் கதி என்ன? இதுதான் படத்தின் கதை. 2013ல் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூது கவ்வும் படத்திற்கும் இப்போது மிர்சி சிவா நடித்து வெளிவந்திருக்கும் அப்படத்தின் 2ஆம் பாகத்திற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் நிறைந்து கிடக்கிறது. படத்தை ரசிக்கும்படி செய்திருப்பது கருணாகரனின் நிதியமைச்சர் கதாபாத்திரம் மட்டும்தான். நகைச்சுவையாளனை கதாநாயகனாகவும் கதாநாயகனை நகைச்சுவையாளனாகவும் மாற்றிவிட்டார் இயக்குநர். 1970ல் ஊழலற்ற ஆட்சி நடந்ததாகவும் அதன் பிறகு வந்த ஆட்சிகள் ஊழல் நிறைந்த ஆட்சிகள் என்ற கோணத்தில் திரைக்கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. இலவசங்கள்தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்கிறது என்ற கருத்தை படத்தில் பதிவு செய்கிறார் இயக்குநர். இதுதான் இப்படத்தின் நகைச்சுவையும்கூட. வாக்குக்கு கும்பிடு போடும் போட்டியாளர்கள், பணத்துக்கு கையேந்தும் வாக்காளர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள் என்பதை அச்சமின்றி ஆணித்தரமாக சொல்லியிருக்கும் இயக்குநர் பாராட்டுதலுக்குறியவர். சூது கவ்வும் படதில் நடித்து வெற்றி பெற்ற விஜய் சேதுபதி, அதன் 2 ஆம் பாகத்தில் நடிக்க மறுத்ததில் அர்த்தம் இருக்கிறது.