மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீட் என்னும் தேர்வைக்கொண்டு வந்து மருத்துவக் கல்விக் கனவைச்சிதைத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கடந்தநான்காண்டு காலமாகத் தமிழ்நாட்டில் மிகக்கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைமதிக்க முடியாத மாணவ, மாணவியர் தங்களது இன்னுயிரை இந்தப்போராட்டத்துக்குத் தாரைவார்த்து மறைந்துபோயிருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே இந்தநீட் தேர்வைத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்துவருகிறது. ஏனென்றால் மாணவர்களுக்குக் கல்வித்தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத் தேர்வுக்குநிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை இரத்துசெய்ய, கழக அரசு அமைந்தவுடன் முதல் சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்றுதிராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல்அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம். அதைநிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியஇளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெற்றமதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்குஏதுவாக, வலிமையான சட்டமுன்வடிவினைஇப்பேரவையில் நான் முன்மொழிகிறேன். கழக அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்குஎதிரான சட்டப் போராட்டத்தைத்தொடங்கியிருக்கிறோம். ஒன்றிய அரசால்நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில்பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்புஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கைசமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். அரசாணை எண் 283, மருத்துவம், மக்கள்நல்வாழ்வுத்துறை, நாள் 10–6–2021 அன்று இந்தக் குழுஅமைக்கப்பட்டது. இந்தக் குழுவிலே பல்வேறுகல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றுஇருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வுவரம்புகளும் வெளியிடப்பட்டன. பொதுமக்கள்அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை இக்குழுகேட்டுப் பெற்றது. மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும்ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் கேட்புப்பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் எனஆணையத்துக்குப் பல்லாயிரக்கணக்கானவர்கள்தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். இந்த வழிமுறைகளின்வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்துபெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவானபரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு 14–7–2021 அன்று அரசுக்கு அளித்தது. அந்தப்பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர்மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்குஇடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில்வளமிகுந்த பிரிவினருக்குச் சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப்படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப்பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும்பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச்சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வுஉறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட(தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள்மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள்எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்குமட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுபுகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள்சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை(தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தைப்மாநில அரசு நிறைவேற்றி, அதற்காகக் குடியரசுத்தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த உயர்மட்டக் குழுஅளித்த விரிவான பரிந்துரைகளைச் செயல்படுத்தநடவடிக்கை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர்அவர்கள் தலைமையில் அரசு செயலாளர்களைக்கொண்ட குழு ஒன்று 15–7–2021 அன்றுஅமைக்கப்பட்டது. செயலாளர்கள் குழு, 2007-ல்தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டத்தைப் போன்றுமருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு நீட் தேர்வினைவிலக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சட்டம்இயற்றி, சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெற்று, அதற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவருடையஒப்புதல் பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளது. நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தைமேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017ஆம்ஆண்டிற்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும்பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளமாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்தநிறுவனங்களிடமிருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள்மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமைவாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலைப்பள்ளிப் பாடத்திட்டம் போதுமான தரத்தில் இருக்கும்சூழலில், தகுதித் தேர்வின் அடிப்படையில்மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்தவகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாது. மேலும், பள்ளித் தேர்வு மதிப்பெண்கள்நெறிப்படுத்துதல் முறைமூலமாக சரிசெய்யப்பட்டால்அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையானசேர்க்கை முறையை வழங்கும். மருத்துவக் கல்விப்படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்தியஅரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில்காணலாம். எனவே, மாநில அரசானது அதைமுறைப்படுத்த தகுதியுடையது. ஆகவே, இன்றுஎன்னால் இந்தச் சட்டமுன்வடிவுஅறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய சட்டமுன்வடிவில், மருத்துவஇளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுசெய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ஆம் வகுப்புத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமைஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரையைக்கவனமாகப் பரிசீலித்த பின்பு, சமூகநீதியைஉறுதிசெய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளைநிலைநிறுத்தவும், பாதிப்பிற்குள்ளாகக்கூடியமாணவர்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில், வலுவான சுகாதாரக்கட்டமைப்பை உறுதி செய்யவும், பன்னிரண்டாம்வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில் அனைத்து மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ளஇச்சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தமாமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமுன்வடிவினைஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன். …
நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானாத்தை நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More