“பயாஸ்கோப்” திரைப்பட விமர்சனம்

சந்திர சூரியன், பிரபு, பெரியசாமி ஆகியோரின் தயாரிப்பில் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, ரஞ்சித், நிலா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பயாஸ்கோப்”. ஒரு குக்கிராமத்தில் சோஷியக்காரன் சொன்ன சோசியத்தால் பயந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இறந்துபோனவரின் மகன், சோஷியம் பார்க்கும் மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அதற்கான கதை ஒன்றை எழுதி திரைப்படம் தயாரிக்கிறார். அவர் எண்ணியபடி சோஷியம் பார்க்கும் மூடநம்பிக்கை ஒழிந்ததா? இல்லையா? என்பதுதான் கதை. இது ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம். அந்த சம்பவத்தைத்தான் திரைப்படமாக்கியுள்ளார்கள். இதற்கு அந்த கிராமத்திலுள்ள தாத்தா பாட்டிகளையே நடிக்க வைத்து நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இயக்குநர் ராஜ்குமாரே இதில் கதாநாயகனாகவும் நகைச்சுவையாளனாகவும் நடித்துள்ளார். திரைத்துறையில் இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர். இயக்குநர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகுகிறார்கள் என்பதை இப்படம் தெளிவாக காட்டுகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவைதான். குளக்கரை ஓரத்தில் நின்று கொண்டு அந்த கிராமத்துப் பெண்ணிடம் ஒரு வசனத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு “இந்த வசனத்தை மிகவும் ஆவேசத்துடன் பேசவேண்டும்” என்று சொல்கிறார் இயக்குநர். அந்த பெண்ணும் மிகவும் ஆவேசத்துடன் பேசி “கட் கட்” என்று இயக்குநர் சொல்லியும் கேட்காமல் தன் சொந்த வசனத்தையெல்லாம் பேசி ஆவேசத்தின் எல்லைக்கே போய் எதிரில் நிற்க்கும் இயக்குநரை அடித்து துவைத்து விடுகிறாள் அந்த கிராமத்து பெண். அவளின் அடிதாங்க முடியாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று குளத்தில் குதித்து இயக்குநர் ஓடும் காட்சியில் திரையரங்கே சிரிப்பில் அதிர்ந்து போகிறது. இது போன்று இன்னும் சிரிப்பு சரவெடிகள் படம் முழுக்க கொட்டிக்கிடக்கிறது. படமெடுக்க தயாரிப்பாளர்கள் தன் சொத்தையெல்லாம் வட்டிக்கு அடமானம் வைக்கும் நிலையை திரையில் காணும்போது சிறுதயாரிப்பாளர்கள் தன் உயிரை பணயம் வைக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் படத்தை பார்த்து ரசித்துவிட்டு சிரித்தபடியே திரையரங்கைவிட்டு வெளியே வரலாம்.  மதிப்பீடு 5க்கு 4.