(27.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது :கே.எம்.எஸ் 2024-2025 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 01-09-2024 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு விவசாயிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டது. அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் மின்னணு கொள்முதல் முறையில் (E-PROCUREMENT) விவசாயிகளிடமிருந்து மட்டும் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி விவசாயிகள் நலன் கருதி சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310/-யும், பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2265/- என விலை நிர்ணயம் செய்து நெல் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டது. அதன்படி நடப்பு காரீப் பருவத்தில் (2023-2024) இதுவரையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 109 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், NCCF நிறுவனத்தின் மூலம் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 137 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சன்னரகம் 1,21,097 மெ.டன்னும், பொது ரக நெல் 18,627 மெ.டன்னும் என மொத்தம் 1,39,724 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்குரிய தொகை ரூ. 321 கோடியே 92 லட்சம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
நடப்பு சொர்ணவாரி பருவத்தில் இம்மாவட்டத்தில் 12703 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 70,000 மெ.டன் நெல் கொள்முதல் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நெல்லினை கொள்முதல் செய்ய 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் தாங்கள் நெல் பயிரிடப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்று, நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து. பதிவு மூப்பு அடிப்படையில் தாங்கள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, திருக்கழுக்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் திரு.யுவராஜ், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.