பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது

சென்னை மாநகர் மேயர் ஆர்.பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பாக, பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொ)  ஜெனிஃபர் ஆர். லிட்டில் ஜான் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர்  கிறிஸ் ஹாட்ஜஸ் ஆகியோர் அடங்கிய குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் நிலப்பரப்பு, 2015ஆம் ஆண்டு முதல் 2023 வரை சென்னையின் மழைப்பொழிவு அளவு, சென்னையின் படுகைகளில் 2005, 2008, 2015, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளின் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள், அதனை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், படுகைகளில் உள்ள ஆறுகள் மற்றும் அமைக்கப்பட்டு மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், சென்னைப் படுகைகளில் உள்ள துணைப் படுகைகள், நகர்ப்புர வெள்ள மேலாண்மையில் உள்ள சவால்கள், சென்னைப் படுகையின் நீரியல் அம்சங்கள், வெள்ளம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள், சென்னையின் படுகைகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பை நிர்வகிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 2021ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், சென்னையை நீர்உறிஞ்சும் நகரமாக மாற்ற பூங்காக்களில் அமைக்கப்பட்டு வரும் நீர்உறிஞ்சும் பூங்காக்கள் குறித்தும், கூவம் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணி மற்றும் இதற்காக பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சென்னையின் நீர்வழித்தடங்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் மற்றும் அதன் வடிகால்களில் கழிவுநீர் வெளியேறுவதை குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  மேயர் தலைமையில், பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொ) மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் இராயபுரம் மண்டலம், நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தினையும், சிவானந்த சாலை கூவம் ஆற்றின் நீர்வழி தடத்தினையும் பார்வையிட்டனர்.

இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (பணிகள்)  வி.சிவகிருஷ்ணமூர்த்தி.இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்  பொதுப்பணித்திலகம், அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தின் அலுவலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.