பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் பாரே (Ms. Lise Talbot Barré – Consul General) ஆகியோர் முன்னிலையில் (28.08.2024) ரிப்பன் கட்டட அலுவலகத்தில் கையெழுத்தானது. இந்தத் திட்டமானது முதற்கட்டமாக மார்க்கெட் தெரு-சென்னை மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்-சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் பட்டேல் நகர்-சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என 4 பிரிவுகளுக்கு விருப்பப் பாடமாக பிரெஞ்சு மொழி கற்றல் வகுப்புகள் முன்னோடித் திட்டமாக தொடங்கப்படவுள்ளது. மாணவர்கள் ஜூனியர் லெவல் A2 வரை கற்பதே இதன் நோக்கமாகும். இது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்வி வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த. விசுவநாதன், உதவி துணைத் தூதர் கிறிஸ்டோஃப் பிரமொல்லே (Mr. Christophe Bramoullé–Deputy Consul General), அலையன்ஸ் ஃப்ரான்செய்ஸ் ஆஃப் மெட்ராஸ் இயக்குநர் பாட்ரிசியா தெரி ஹார்ட் (Ms.Patricia Thery Hart – Director, Alliance Française of Madras), தென்னிந்தியா, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் ஃப்ரெஞ்சு மொழி ஆலோசகர் தாமஸ் சாமொன்ட் (Mr.Thomas Chaumont – French Language Attaché / South India, French Institute in India) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.