தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 78,663 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (08.12.2023) 623 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழைநீர் வடிந்த இடங்களில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 526 நடமாடும் மருத்துவ முகாம்கள்நடத்தப்படுகின்றன. மேலும், 97 நிலையான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தமுகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.