மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் கைத்தறிதுறை சார்பாக ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனையினை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கும்பகோணம், காஞ்சிபுரம், சேலம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை சரகத்தில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள பட்டு புடவைகளின் தேக்கத்தினை குறைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி மதுரை மாநகரில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி 28.07.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற்றது. இதில் ரூ. 294 கோடி மதிப்புள்ள பட்டு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி 08.08.2024 முதல் 22..08.2024 வரை 15 நாட்களுக்கு மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள எல்.என்.எஸ்.மஹாலில் நடத்தப்படுகிறது. இச்சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் 19 அரங்குகள் அமைக்கப்பட்டு 7 சரகங்களை சேர்ந்த 22 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கள் கலந்துகொண்டுஉள்ளன. இக்கண்காட்சியில் பட்டு இரகங்களுக்கு 19% முதல் 65% வைர சிறப்பு தள்ளுபடி மற்றும் அரசு அனுமதித்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் ரூ.3.00 கோடி மதிப்புள்ள பட்டு ஜவுளிகள் விற்பனை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் திருமதி.தெ.மேகலா மற்றும் கைத்தறி துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.