‘டூடி’ படம் செப்டம்பர் 16 திரைக்கு வருகிறது

கணெக்டிங் டாட்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் , கார்த்திக் மதுசூதன் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டூடி’. இசையும் இளமையும் இணைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக் மதுசூதன் ஜோடியாக சனாஷாலினி, ஷ்ரிதா  சிவதாஸ் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனிஅர்ஜுன் மணிகண்டன், விஜய் மணிகண்டன், மதுசூதன் GV, அக்ஷ்தா, எட்வின் ராஜ், உத்ரா, ராணி ஸ்வாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 16ல் திரைக்கு வருகிறது.*********

பிரபல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்த பாலசாரங்கன் இந்த படத்திற்கு  இசையமைத்துள்ளார். பிரவீன் K.L லிடம்  உதவியாளராக இருந்த ஷாம் ஆர்டி எக்ஸ் எடிட்டிங் செய்ய, மதன் சுந்தர்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும் கதாநாயகனுமான கார்த்திக் மது சூதன் பேசியதாவது:-

”சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு சின்ன வயசிலிருந்தே ஆடல், பாடல் என கலைகளில் ஆர்வம் இருந்தது. அப்போதிலிருந்தே எனக்குள் சினிமா ஆசை இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பும் வசதியும் அப்போது கிடைக்கவில்லை. என் அப்பா ஒரு சமையல்காரர். அதனால் 24 வயசில் நான் கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்து சம்பாதிக்கத் தொடங்கினேன்.
2018ல் மீண்டும் சினிமா ஆசை வந்து கதை எழுதினேன். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாலசாரங்கனிடம்தான் முதன் முதலில் கதையை சொன்னேன். கதையை கேட்ட அவர் நன்றாக இருக்கிறது என்றார். பிறகு பட வேலைகளை தொடங்கினோம். கொரோனா காலக்கட்டத்தில் பட வேலைகள் பாதிக்கப்பட்டு சிக்கலை சந்தித்தேன்.
பல தடைகளை தாண்டி ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து செப்டம்பர் 16 அன்று ரிலீஸ் ஆகிறது.  படத்தில் நான் கிடார் இசைக்கலைஞனாக வருகிறேன். டூடி என்றால் என்ன அர்த்தம் என்பதை படம் பார்த்தால் விடைகிடைக்கும் . படத்தின் எடிட்டர் ஷாம்  என்னோடு இணைந்து இயக்கத்திலும் பங்கேற்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் மதன் சுந்தர்ராஜ் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ’டூடி’ இருக்கும்.”

எடிட்டர் ஷாம் ஆர்டி எக்ஸ் பேசும்போது, “இது ஒரு காதல் கதைதான். ஆனால் ஃபேமிலி டிராமாவும் கலந்ததாக இருக்கும்.  பெரிய படத்திற்கு இணையான மேக்கிங் இருக்கும். சென்னை, பெங்களூர், கூர்க் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.”என்றார்.

ஒளிப்பதிவாளர் மதன் சுந்தர்ராஜ் பேசும்போது,

 “தீதும் நன்றும்’, ‘இஸ்பெட் ராஜா’, ‘வீரமே வாகை சூடும்’ போன்ற படங்களில் நான் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளேன். இப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறேன். தயாரிப்பாளர் கார்த்திக் மது சூதன் பெரிய படத்துக்கு இணையான லைட்டிங், மற்றும் லென்ஸ் வசதிகளை செய்துகொடுத்ததால் படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் பாலசாரங்கன் பேசியபோது,

“இதுவரை 50 படங்களுக்கும் மேல் உதவி இசையமைப்பாளராக வேலை செய்துள்ளேன். இது எனக்கு முதல் படம். படம் பார்க்கும்போது, இசை உள்ளிட்ட எல்லா அம்சங்களும் உங்களுக்கு பிடிக்கும். இந்த நேரத்தில் எனது இசை குருமார்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்றார். நிகழ்வின் முடிவில் நாயகன் கார்த்திக் மதுசூதன், படத்தில் வரும் ஒரு பாடலை கிடார் இசைத்தபடி லைவாக பாடி அசத்தினார்.