சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த உதவி ஆணையாளர் புருஷோத்தம்மன், (ஆயுதப்படை-1), 1 மூத்த புகைப்படக்கலைஞர், 2 கண்காணிப்பாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 உதவியாளர் என மொத்தம் 15 காவல் அலுவலர்கள் செப்டம்பர்-2024 பணி ஓய்வு பெறுகின்றனர். இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  ஆ.அருண், இ.கா.ப., சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற  15 காவல் அலுவலர்கள், சுமார் 23 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

காவல் ஆணையாளர், ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். பணி ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என காவல் ஆணையாளர் ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களிடம் தெரிவித்தார். மேலும் பணி ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களுக்கு ஓய்வு ஊதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என காவல் ஆணையாளர் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, இ.கா.ப, காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.