கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ‘யார் கோள்’ என்ற இடத்தில் தடுப்பணை கட்டி முடித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்த நீராதாரத்தை தடுத்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும், நீர்பகிர்வு கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். ஐம்பது கோடி கன அடி தண்ணீரை தேக்கும் யார் கோள் அணை திட்டத்தால் தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் உருவாகும். சாத்தனூர் அணை தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டியுள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் நீராதாரம் பறிபோயுள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ தண்ணீர் உரிமையை தொடர்ந்து மறுத்து வருவது மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை பலவீனப்படும். இதுபோன்ற நேர்வுகளில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு பாரபட்சமில்லாத, சார்பற்ற நடுநிலையோடு அணுகி தீர்வு காண்பதுதான் கூட்டாட்சி கோட்பாட்டை உறுதிப்படுத்தும். ஆனால் பாஜக ஒன்றிய அரசு கர்நாடக அரசின் அத்துமீறலை தொடர்ந்து ஆதரித்து வருவதும் அல்லது சார்பு நிலை எடுப்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கர்நாடக மாநில அரசின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை எதிர்த்து சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்டி தண்ணீர் உரிமை பாதுகாப்புக்கான மக்களியக்கத்தை கட்டமைப்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்