அரசுப் பள்ளிகள் சனாதன,  மூடநம்பிக்கை  பரப்புரை மையங்களா? அரசு உடனடியாக தடுக்க வேண்டும் – முத்தரசன்

சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ‘பரம்பொருள் பவுண்டேசன்’  என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் சனாதன கருத்துக்களை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கி பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியர் மிரட்டப்பட்டுள்ளார். இதே சொற்பொழிவாளர் மாணவிகள் நிறைந்த மற்றொரு பள்ளி நிகழ்வில் பேசும் போது பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தி  பேசியுள்ளார். பெண்கள் அழகின்றியும், மாற்றுத்திறனாளிகளாவும் பிறந்து வருகிறார்கள் என்றெல்லாம் பேசி அவமதித்துள்ளார். இந்த பொறுப்பற்ற, மூடத்தனமான பேச்சுக்கு  ஆட்சேபனை தெரிவித்த மாணவர் அமைப்புகளின் முறையீடுகள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களால்  அலட்சியப்படுத்தப்பட்டுட்டுள்ளது.  இந்தச் செய்தி ஊடகங்களில்  வெளியானது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை சம்பவம் குறித்து  விசாரணை நடத்தி, தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்ற அறிவிப்பை வெளியிட்டார். இப்போது விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் விடுமுறை என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து வருவதாக தகவல் வருகிறது.

அரசுப் பள்ளிகள் முட நம்பிக்கை கருத்துக்களுக்கான  பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் அமைப்புகளின் பயிற்சி களமாகவும் பயன்படுத்தி, இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை  முற்றிலுமாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.