அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன்

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணிதிரட்டி, போராடும் உரிமை என அடிப்படைகள் உரிமைகள் மீது பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலையும், அதன் மோசமான விளைவுகளையும் எதிர்த்துப் போராடுவோர் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.  அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை தொடர்ந்து இயற்றி வரும் ஒன்றிய அரசு தற்போது திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா-2021ஐ கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் திரைப்படங்களில் தங்கள் விரும்பும் சார்பு கருத்துக்கள் மற்றும் காட்சிகளை மட்டுமே அனுமதிக்க வழிவகை செய்துள்ளது. மேலும் தணிக்கைத்துறையின் அனுமதி பெற்று புலக்கத்தில் பழைய திரைப்படங்களையும் தடைசெய்வது, அதன் பல்வேறு காட்சிகளை வெட்டிச் சீர்குலைப்பது என்ற தீய நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. மேல் முறையீட்டு உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என குரல் எழுப்பி வருபவர்களை குறிப்பாக கலைஞர் சூர்யாவை குறிவைத்து பாஜக இளைஞர் பிரிவும், அதன் ஆதரவு அமைப்புகளும் கலகத்தைத் தூண்டும் மலிவான செயலில் ஈடுபட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக உரிமைப் பறித்து சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் சீர்குலைவு செயல்களை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்