தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த முறை மக்களாட்சி முறைக்கு மாறானது. அதிகார அத்துமீறலாகும்.
தமிழ்நாட்டுக்கான ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி நியமிக்கப்படும் போதே சர்ச்சைக்குள்ளானார். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தங்கள் செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முகவராக அவர் அனுப்பப்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இன்று நடக்கும் நிகழ்வுகள் அதனை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளன. அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற ஆளுநரின் செயல்பாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் நிராகரிக்கும் அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. மாநில அரசிடம் ஏதேனும் விபரம் பெற வேண்டிய தேவை ஆளுநருக்கு ஏற்பட்டால் அவர் முதலமைச்சர் மூலமாக பெற வேண்டும். அதுதான் மக்களாட்சியின் மாண்புக்கு மதிப்பளிக்கும் பண்பாடாகும். இதற்கு முன்னர் இருந்த ஆளுநர் அத்துமீறி செயல்பட்டு, சர்ச்சையில் சிக்கி, சென்ற இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி எதிர்ப்பை சந்தித்தார் என்பதை இப்போதைய ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். ஆளுநர் தனது கடமைப் பொறுப்புகளை அதன் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற பிரச்சினைகளில் தலைமைச் செயலாளர் கூடுதல் எச்சரிக்கையுடன், அமைச்சரவை அல்லது முதலமைச்சர் ஆலோசனை பெற்று செயல்படுவது அவசியம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
—
தமிழ்நாடு மாநிலக்குழு