ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து சிதைத்து வருகிறது. இந்த முன்னோடித் திட்டத்திற்கு பாஜக ஒன்றிய அரசு ஆரம்பத்தில் இருந்தே நிதியொதுக்கத்தை வெட்டிக் குறைத்து வருகிறது. பல்வேறு திட்டங்களையும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சேர்த்து அதன் அடிப்படைகளை தகர்த்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய்ப்பரவல் நாடு முடக்க காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பியதால் வேலை கேட்போர் எண்ணிக்கை அதிகரித்ததும், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டதால் ரூ.1.11 லட்சம் செலவிடப்படுள்ளது. வேலை கேட்கும் தொழிலாளர் எண்ணிக்கை குறையாத போது, வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கான நடப்பாண்டு நிதி (2021- 22 ) ரூ.73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை மாநிலங்களுக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிதியை இதுவரை வழங்காததால் வேலை செய்த தொழிலாளர்கள் ஊதியம் பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் மூன்று, நான்கு மாதங்களாக செய்த வேலைக்கு கூலி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பாஜக ஒன்றிய அரசு நூறு நாள் வேலை தொழிலாளர்களை வஞ்சிப்பதை கைவிட்டு. உடனடியாக அவர்களது ஊதியப்பாக்கியை முழுமையாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு சேர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.