ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் மற்றும் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தகவல் அடிப்படையில், சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இரு பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனை நடத்தினர். நெதர்லாந்தின் பார்குலோ நகரில் இருந்து சென்னையை சேர்ந்த நபருக்கு அனுப்பப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் ஒரு சில்வர் நிற பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிற படிக பவுடர் இருந்தது. அது மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் என கண்டறியப்பட்டது. 15 கிராம் எடையுள்ள அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.1.5 லட்சம். அமெரிக்காவின் ஒரேகான் மாகாணம் செயின்ட் போர்ட்லேண்ட் பகுதியில் இருந்து சேலம் நபருக்கு வந்த பார்சலை பிரித்து சோதித்தபோது, கருப்பு நிற உறை இருந்தது. அதில் ‘ஹைட்ரோ கேனபி’ என்ற உயர் தர உலர்ந்த கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 100 கிராம் கஞ்சாவின் மதிப்பு ரூ.80,000. 15 கிராம் மெத்தாம்பேட்டமைன், 100 கிராம் ஹைட்ரோ கேனபி ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.30 லட்சம். இவை போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.