சி பா ஆதித்தனார் அவர்களின் 43 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,
தினத்தந்தி என்ற நாளிதழை ஆரம்பித்து அதன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் தமிழை பாமர மக்களும் அறியும்படி செய்தவர் சி பா ஆதித்தனார். அவரது நினைவு நாளில் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.
விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரமாக நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு, கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு, அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு.அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கைகள் எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள்.
இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறது இந்த விடியாத அரசு. கேரளாவிற்கு போய் பேச வேண்டும், கர்நாடகாவுக்கு போய் பேச வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள கூட இந்த ஆட்சியாளர்களுக்கு வக்கில்லை.
இந்த வருடம் 50 சதவீதம் தண்ணீர் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 50 சதவீதத்தை கேட்டு பெற துப்பில்லாமல், விவசாயிகளுக்கு தண்ணீர் பாசனத்திற்கு வழியில்லாத வகையில் ஒட்டுமொத்த துரோகத்தையும் திமுக அரசு செய்கிறது.தண்ணீர் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையோ, கூட்டணி சார்பாக அழுத்தமோ திமுக கொடுக்க தவறுகிறது.
திருவள்ளுவரைப் பொருத்தவரை உலகப் பொதுமறை தந்தவர். உலகம் முழுவதும் அதிக அளவுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருவள்ளுவரைப் பொருத்தவரையில் சாதி கிடையாது, மதம் கிடையாது, இனம் கிடையாது. அப்படி இருக்கின்ற ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று.
தற்பொழுது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன!!? தமிழினத்தையும் திருவள்ளுரையும் அவமானப்படுத்தும் விதமாக தான் ஆளுநரின் செயலை பார்க்க முடிகிறது. ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது .
ஜாதி மதம் இனம் மொழி என எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் நேசிக்க கூடிய ஒரு மிகப்பெரிய உன்னத தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அண்ணாமலை போன்றவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறவர்கள்.அண்ணா திமுக ஒரு படகு அதற்கு ஜாதி மதம் மொழி எதுவும் கிடையாது. குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கருத்து என்பது நிச்சயமாக யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.
உதயநிதி இர்பானுக்கு எந்த அளவு நெருங்கிய நண்பர் என்று தெரிந்ததே. அவரின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அவருடைய கட்சிக்காரர்கள் சட்டத்தை கையில் எடுத்தால் அந்த சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. வேறு யாராவது அவ்வாறு செய்தால் உடனே கைது செய்வார்கள்.
பிளாக்கில் மது விற்பனை செய்யும் சமூக விரோதி திமுக வில் இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தலை சரியாக இருந்தால் தான் வால் சரியாக இருக்கும்.ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருப்பதால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
தொடர் கொலைகள், தொடர் குற்றங்கள் என சட்ட ஒழுங்கு மோசமாகி சந்தி சிரிக்கின்ற நிலையில் இப்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கிறது. அதில் எல்லாம் முதல்வர் கவனம் செலுத்துவதில்லை.எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறை ஒரே காவல்துறை தான். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால், ஏன்டா காக்கி சட்டை போடுறோம் என்கிற அளவுக்கு காவலர்கள் மனம் வருந்துவதாக கூறினார்.