பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி

கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகட்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டுதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  திருடுபோன சிலைகள் திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகியவை.  மேற்கண்ட சிலைகள் வெளிநாட்டைச்சேர்ந்த சிலை கடத்தல் கும்பலால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  சிலைதிருட்டு தடுப்புபிரிவினரின் இடைவிடாதமுயற்சியால் மேற்கண்ட சிலைகள் வெளிநாட்டில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  குறிப்பாக திருமங்கை ஆழ்வார்சிலையை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால் 1967ல்வாங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.  ஏனைய காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகளும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கின் புலன்விசாரணையில் தற்போது மேற்கண்ட நான்கு சிலைகளின் பிரதிகள் மட்டுமே கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.  உண்மையான சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது.  மேற்கண்ட தகவல்களை கண்டறிந்த தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினர், திருடி கடத்தி விற்கப்பட்ட சிலைகளை மீண்டும் தமிழகம் கொண்டு வந்து உரிய வழிபாட்டு கோவிலில் வைக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உயர்குழுவினர், திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையானது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரிருமாதங்களில் இந்தச் சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளும் சிலைதிருட்டு தடுப்புப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர்  சங்கர்ஜுவால் இ.கா.ப., இந்த சிலையை கண்டுபிடித்து, உரிய ஆதாரங்களை அளித்து மீண்டும் கும்பகோணம் கோவிலுக்கே வெற்றிகரமாக திருப்பிக்கொண்டுவர காரணமாக இருந்த தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினரை வெகுவாகபாராட்டினார். தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினர், இதேபோன்று மீதமுள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும்ஸ்ரீதேவி சிலைகளை அமெரிக்காவிலிருந்து மீட்டுவர தீவிரமுயற்சிகளை எடுத்துவருகின்றனர்.