தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளைஅறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும்வகையில் 04.12.2021 சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளைப் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இருபத்தோராவது வாரமான 25.06.2022 அன்று முனைவர் இதயகீதம் இராமானுஜம் “பாரதி ஒரு பைந்தமிழ்த் தேர் சாரதி” எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். அதனைத் தொடர்ந்து வானவில் பண்பாட்டு மையம் சார்பாக நிருத்யாஞ்சலி கலைப் பள்ளி மற்றும் காவேரி ரமேஷ் குழுவினரின் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்‘ பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் வி.என்.அண்ணாதுரை வரவேற்றுப் பேசினார். வானவில் பண்பாட்டு மைய உறுப்பினர் சாந்தி ஜெகத்ரட்சகன், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.எஸ்.ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.