செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் 31.10.2022 அன்று நடைபெற்றது.

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் இன்று (31.10.2022) சென்னை மாநிலச் செய்தி நிலையக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தமது தலைமையுரையில், ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க கூடிய நினைவகங்கள், மணிமண்டபங்கள், அரங்கங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் வழிகாட்டிப் பலகைகள் வைத்தல் போன்ற பணிகளை முறையாக செய்திட வேண்டும் என்றும், புதியதாக அறிவிக்கப்பட்டு இன்னும் செயல்பாட்டிற்கு வராத திட்டங்களை, குறிப்பாக நிலம் தேர்வு செய்யப்படாத பணிகள் போன்றவற்றை காலதாமதம் ஆகாமல் உரிய துறைகளின் ஒத்துழைப்போடு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் எடுத்துச்சென்று இடங்களை தேர்வு செய்து பணிகளை நவம்பர் 15 ஆம் தேதிக்குள்ளாக முடித்து, திட்டங்களை தொடங்கிவைக்கின்ற சூழலை உருவாக்கிட வேண்டும் என்றும்அறிவுறுத்தினார்.

தமிழரசு மாத இதழுக்கான சந்தாதாரர்களை சேர்ப்பதில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்றும், ஒரு இலட்சம் தமிழரசு சந்தாதாரர்களை சேர்க்க வேண்டும் என்கிறஇலக்கினை அடைய மக்கள் பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், பொதுநல அமைப்புப் பிரதிநிதிகள் போன்றோர்களை தொடர்ந்து சந்தித்து தமிழரசு சந்தா எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து மனுநீதி நாள் முகாம்போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின்பு மாவட்ட ஆட்சித் தலைவருடன் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று இலவச மின்சாரம், வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள், பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம், புதிய பேருந்து வழித்தடங்கள் உருவாக்கல் போன்ற திட்டங்களை விளக்கவும், அதில் பயன்பெற்ற பயனாளிகளின் நேர்காணல் செய்திகளை வெளியிட ஏற்பாடு செய்து திட்டங்களின் பயன்களைக் கடைக்கோடியில் உள்ள பொதுமக்களுக்கும் கொண்டு சேர்த்திட அர்ப்பணிப்புடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் இவ்வாறு செய்திகள் வெளிவரும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறுவார்கள். ஆகவே, மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து செய்தியாளர் பயணத்தை முறையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு குறித்த எதிர்மறை மற்றும் தவறான செய்திகள் பரவும்போது அச்செய்திகள் தவறான செய்திகள் என எடுத்துச் சொல்லும் வகையில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவ்வாறு வந்த தவறான செய்தியை மறுத்து அது உண்மையான செய்தி அல்ல என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இதனால் உண்மையான நிகழ்வு என்ன நடந்திருக்கிறது என்பது மக்களிடம் போய்ச்சேரும் என்றும்அறிவுறுத்தினார். மேலும், மண்டல இணை இயக்குநர்கள் முழு கவனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் செயல்பட்டு திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரை யாற்றினார். இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர் (செய்தி), திரு.சிவ.சு.சரவணன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு. மு.பா. அன்புச்சோழன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.