பரம்பிகுளம் அணையின் பழுதடைந்த மதகை சீரமைக்கும் பணி நவம்பர் 20ம் தேதிக்குள் நிறைவடையும்

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை  இன்று(02.11.2022) மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர்  நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் அமைந்துள்ள நீர்பாசன திட்டங்களில் முக்கியமான திட்டம் பரம்பிகுளம் ஆழியாறு பாசனத்திட்டம்  ஒன்றாகும். பரம்பிக்குளம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மூன்று மதகுகளின் வழியாக  தண்ணீர் வெளியேற்றப்பட்டு  வந்தது.  21.09.2022 அன்று அதில் ஒரு மதகின் ஷட்டரை தாங்கும் சங்கிலி அறுந்த  காரணத்தால், ஷட்டர் பழுதடைந்து 5.8 டி.எம்.சி தண்ணீர் வீணாக  ஆற்றின் மூலம் கேரளா வழியாக கடலில் கலந்துவிட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், ஆகியோர் உடனடியாக அணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடனர்.  

பின்னர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இதுகுறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கவனத்திற்கு கொண்டுசென்று, புதிய ஷட்டர் அமைக்க  சுமார் ரூ.7.20கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. போர்காலப் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஷட்டரைஅணையில் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. மற்ற  இரு ஷட்டர்களின் பராமரிப்பு பணியும் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளில் 90சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் வருகின்ற 20.11.2022க்குள் நிறைவடையும்.  அதற்குபிறகு பெய்யும் மழை நீர் வீணாகமல் தடுக்கப்படும்.  இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பரம்பிகுளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள்  பயனடைவார்கள். என மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு,  சர்க்கார்பதி பகுதியில் உள்ள அணைகளை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.