நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் 07.12.2022 முதல் 09.12.2022 வரை (மூன்று நாட்கள்) நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இன்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எதிர்காலத்தில் இந்தியா வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழ்நிலையை பெற்றிருக்கிறது என்றால் அது நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் ஆகும் எனக் குறிப்பிட்டார். பின்னர் கல்லூரிகள் அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ஆணைகளையும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 56,40,000/- மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். சென்னை மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் காமராஜ் நோக்கவுரையாற்றினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும் அவர்கள் குறித்த தகவல்களும் உள்ள கண்காட்சியை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் பார்வைக்காக ஏராளமான படங்களுடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றையும் அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வரலாற்றைப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வீர வரலாற்றை இளம் சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது.