செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், அருங்குன்றம் ஏரியில் ஒரு கோடி பனை நடும் நெடும் பணியின் பகுதியாக
மாபெரும் பனை நடவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் காஞ்சிபுரம்
நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் முன்னிலையில் குறு சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை
அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தினை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை மரம் நடும் நிகழ்வினை தொடங்கி இது நாள் வரையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,31213 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. நமது தமிழ் நாட்டில் சுற்று சூழல் பாதுகாப்பதற்கும் மழை காலங்களில் கடற்கரைகளை எரி கரைகளை பாதுகாப்பதற்கும் இந்த பனை மரங்கள் பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக இருப்பதால் பனைக்கு கற்பக விருட்சம் என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். பனை மரங்களை அழிவில் இருந்து பாதுகாக்கவே இந்த திட்டம் தமிழ்நாடு அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மகளிர் குழுக்கள். தன்னார்வலர்கள், அரசு துறைகளுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழும் வனத்துறையின் திட்டத்தின் கீழும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேல் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிகள் நிறைந்த இம்மாவட்டத்தில் இத்திட்டம் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வனத்துறை மூலமாக மாபெரும் பனை நடவு திருவிழா அருங்குன்றம் பெரிய ஏரி கரையில் 5000 பனை
விதைகள் நடவு செய்யும் பணி நடைப்பெற்றது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், மகளிர் குழுக்கள், தேசிய ஊரக வளர்ச்சி திட்ட வேலையாட்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கு பெற்று 5000 பனை விதைகள் நடுவு செய்தனர் என மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ரவிமீனா, இ.வ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், வேளாண்மை ஆத்ம குழு தலைவர் பையனூர் சேகர் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.