தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவை குண்டத்தில் 1999 ஆம் ஆண்டு வாழைத்தார் லோடு லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி 19 பேர் உடல் நசுங்கி இறந்த சோக சம்பவத்தை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திவ்யா மாரி செல்வராஜ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பொன்வேல், ராகுல், ஜானகி, திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், ஆகிதோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வாழை”. வாழைத்தார் லாரி எப்படி விபத்துக்குள்ளானது என்பதுதான் கதை. பொன்வேலும் ராகுலும் பாடசாலையில் படிக்கும் நண்பர்கள். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள். பாடசாலை விடுமுறை நாட்களில் அம்மா ஜானகி, அக்காள் திவ்யா துரைசாமி ஆகியோருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து அதில் கிடைக்கும் கூலியை வைத்து காலம் கழிக்கிறார்கள். படிப்பிலும் குறும்பு விளையாட்டிலும் முதல் மாணவனாக இருக்கிறான் பொன்வேல். அழகான ஆசிரியையின் மீது மாணவர்களுக்கு ஏற்படும் கபடமில்லாத ஈர்ப்பை பொன்வேல் அழகாக புன்சிரிப்பில் காட்டுவதை ரசிக்க முடிகிறது. பாடசாலை ஆண்டு விழாவில் ஆசிரியை நிகிலா பட்டுப்புடவையில் இருக்கும் அழகை மெய் மறந்து பார்த்துவிட்டு, “டீச்சர் இதற்கு முன்பு நீங்க எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க, இப்ப எங்க அக்கா மாதிரி அழகா இருக்கிங்க” என்று சொல்லும் காட்சியில் கைத்தட்ட வைக்கிறார் இயக்குநர். ஏழைகளின் வறுமையை தன் நடையிலேயே காட்டுகிறார் ஜானகி. ஆசிரிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார் நிகிலா விமல். போராட்டவாதியாகவே வாழ்திருக்கிறார் கலையரசன். பசியின் கொடுமையை உச்சக்கட்ட காட்சியில் காட்டும் பொன்வேல் நடிப்பின் சிகரத்தில் ஏறி நிற்கிறார். உச்சக்கட்ட காட்சி படம் பார்ப்பவர்களை அழ வைததுவிடுகிறது. ஏழைகளின் உயிரோடு விளையாடும் மேலாதிக்க வர்க்கத்தின் முகத்திரையை வெண்திரையில் கிழித்தெறிந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.