கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக அதிகாரி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
திமுக ஆட்சி வரவேண்டும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தீ வைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ளது காளியம்மன் திருக்கோயில். மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குலதெய்வம் இந்த கோயில்.
இன்று காலை கோவிலுக்குள் வந்த நபரொருவர் தனது பையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எதிர்பாராமல் நபர் ஒருவர் தீ வைத்துக் கொண்டதை கண்ட கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிதறி ஓடினர். தீ முற்றிலும் பரவி அந்த நபர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். தீ வைத்துக் கொண்ட நபர் ஒரு அருகில் வாக்குமூல கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அந்த கடிதத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும்.. செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும், ஏற்கனவே, தான் இந்த கோயில் வேண்டிக் கொண்டதாகவும், இப்போது அது நடந்துவிட்டது. வேண்டுதல் நிறைவேறியதால் தான் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீக்குளித்தவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் தற்கொலை செய்துகொண்ட நபர் லாலாபேட்டையைச் சேர்ந்த உலகநாதன் என்றும், இவர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.