“அஞ்சாமை” ஜூன் 7ல் வெளியீடு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு  கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.*******

இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர்  விதாத் பேசும்போது,  “நடிப்புத்துறைக்கு வந்ததில் இந்த படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அழ ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் நான்கு விதமான காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் திண்டுக்கல்லில் இதன் படப்படிப்பையும் இடைவெளி விட்டுவிட்டு நடத்தினோம். படத்தின் புரொடக்ஷனிலும் உதவியாக இறங்கினேன். இதில் மம்முட்டியை நடிக்க வைப்பதற்காக அவரை பேரில் சென்று பார்த்து கதை சொல்லி அவருக்கும் பிடித்து போனது. ஆனால் தேதிகள் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் அதற்கு பதிலாக அடுத்ததாக ரகுமான் சார் வந்தார். ரொம்பவே பிரமாதமாக பண்ணி உள்ளார். நான் நடித்ததிலேயே கொஞ்சம் அதிக பொருட்செலவு ஆன படம் இது. அதன் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை பார்த்த அன்றே இதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள்.

நடிகராக இருப்பதற்கு நான் ஏன் பெருமைப்படுகிறேன் என்றால் மன்னரிடம் மக்கள் தங்கள் குறையை முதன்முதலாக நடனம், நாடகத்தின் மூலமாக தான் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் நடிக்க துவங்கியதே கூத்துப்பட்டறையில் தான். மக்களின் பிரச்சனைகளை நாடகங்களாக போட ஆரம்பித்தோம். சிறுவயதில் அம்மாவுடன் சென்று சாமி படங்களை பார்க்கும் போது மக்கள் சிலர் சாமி வந்து ஆடுவதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இசைக்காக ஆடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாடகத் துறைக்கு வந்ததும் தான் சினிமா மக்களை ஒருங்கிணைக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தப் படம் பார்க்கும்போது அனைவருமே தங்களை இதனுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். இது இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம். அப்படி ஒரு பிரச்சனையை என் படம் மூலமாக சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு ஒரு அற்புதமான பாடல் கிடைத்திருக்கிறது.

என்னுடன் நடித்திருக்கும் கிருத்திக்கை அடுத்த தலைமுறை நடிகராக பார்க்கிறேன். அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாணி போஜன் சிறந்த நடிகை என்றாலும் இதுவரை பார்த்திராத அவரது நடிப்பை இதில் பார்க்கலாம். ரேவதிக்கு அடுத்ததாக அவரை சொல்லும் விதமாக தனது கதாபாத்திரத்தில் அப்படி ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன் படத்தொகுப்பிலேயே சிம்பொனி செய்திருக்கிறார். பாலச்சந்திரன் ஐஏஎஸ் கோர்ட் காட்சிகளில் பிரமாதப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடித்ததை எனது கடமையாக நினைக்கிறேன். பணம் வாங்கிக்கொண்டு தான் நடித்தேன் என்றாலும் இந்த படத்தில் அனைத்து வேலைகளையும் இறங்கி பார்த்தேன். பல படங்களை இதற்காக நான் விட்டிருக்கிறேன். நான் நடிக்க வந்ததற்கான அர்த்தம் இந்த படம் நடித்தபோது கிடைத்தது. பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று படங்களை எந்த அளவிற்கு நீங்கள் பாராட்டுகிறீர்களோ அதே போன்ற ஒரு படத்தை இப்போது கொடுத்து இருக்கிறோம்” என்றார்.