“அஞ்சாமை” திரைப்பட விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  எஸ் பி சுப்பிரமணியன் இயக்கத்தில், விதார்த், வாணி போஜன், ரஹ்மான் ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்திருக்கும் படம் அஞ்சாமை.  மதுரையில் பூ பயிரிடும் விவசாயி  விதார்த். அரசு பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அவரது மகன் மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அம் மாணவனின் ஆசை டாக்டராக வேண்டும் என்பதுதான். அதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும்.  மதுரையில் இருக்கும் மாணவருக்கு நீட் தேர்வு எழுத,  ஜெய்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியை தேர்வு செய்கிறது அரசு. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவனின் தந்தை விதார்த் மிகவும் கஷ்டப்பட்டு தன் மகனை அழைத்துக் கொண்டு ஜெய்பூர் செல்கிறார். செல்கின்ற இடத்தில் விதார்த் இறந்தும் விடுகிறார். அம்மாணவன் நீட் தேர்வு எழுதினாரா? எப்படி விதார்த் இறந்தார்? என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதைதான் “அஞ்சாமை”.  இப்படத்தின் முன் பகுதி முழுவதும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக வரும் ரஹ்மான், படத்தின் பின்பகுதியில் வழக்கறிஞராக வருகிறார்.  விதார்த் இறந்ததற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் வழக்காடும் ரஹ்மானின் நடிப்பும்  வசனங்களும் அனைவரையும்  கைதட்ட வைக்கிறது.  ஒரு விவசாயின் மனவலியை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விதார்த்.   விதார்தின் மனைவியாக வரும் வாணி போஜனின் நடிப்பு கவரும்படி உள்ளது.  உச்ச கட்ட காட்சியில் வழக்கின் தீர்ப்பு, ஏழைகள் தங்களது உரிமையை பெற இன்னும் போராடத்தான வேண்டும் என்பதை  இயக்குனர் சொல்லி இருக்கிறார்.  சட்டத்திற்காக மக்கள் இல்லை, மக்களுக்காகத்தான் சட்டம்  என்பதை அரசு எப்போதுதான் உணரும்?.