இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் படம் ‘லக்கி பாஸ்கர்’ வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாஸ்கர் கதாபாத்திரம் எல்லோருக்கும் தொடர்பு ஆகும். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதை சுற்றி கதை இருக்கும். இப்போது என் உடல்நிலை சரியாகி இருப்பதால் இந்தப் படத்திற்கும் பின்ணனிக் குரல் கொடுத்திருக்கிறேன். வெளியீடின்போது நிச்சயம் படத்தில் என் குரல் இருக்கும். ராம்கி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. இரண்டு வருடங்களாக வெங்கியுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது வெங்கி என்னுடைய சகோதரர். பாஸ்கர் வாழ்க்கையில் முக்கியமான பங்கு மீனாட்சி செளத்ரிக்கு உண்டு. படம் முழுக்க வருகிறார். எனது மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வயதில் மிகவும் திறமையான நடிகராக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் படம் என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’, ‘ப்ளெடி பெக்கர்’ படங்களும் வருகிறது. இதில் ‘லக்கி பாஸ்கர்’ படமும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்” என்றார்.