துல்கர் சல்மான் நடிக்கும் படம் “காந்தா”

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகியுள்ளது. பதாகையில்  துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மகாநடி’, ‘குரூப்’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான  ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’  என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது.  செல்வமணி செல்வராஜ் ‘காந்தா’ படத்தை இயக்குகிறார். *********

இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின்  பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்” என்றார்.  இந்த திரைப்படத்தில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளது. நடிகர் ராணா டகுபதி, அவரது தாத்தா டி. ராமாநாயுடுவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமும் நடிகர் துல்கர் தலைமையிலான வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. பல திறமையாளர்களை இந்த நிறுவனங்கள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அதில் ‘காந்தா’ மறக்க முடியாத படமாக இருக்கும்.  ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.