நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனர்- நடிகர் துல்கர் சல்மான்கூறும்போது, “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை ‘காந்தா’வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு” என்றார்.
படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக ‘காந்தா’ இருக்கும்” என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், “இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. ‘காந்தா’ மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்” என்றார்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸின் வளமான பாரம்பரியம், கலைசார்ந்த கதை சொல்லல், புதுமையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக ‘காந்தா’ படம் உள்ளது. இந்த புதிய சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.