குமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிர° கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3500 கி.மீ கடந்து காஷ்மீர் வரை, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ (‘பாரத் ஜோடோ யாத்ரா’) மேற்கொண்டு வருகின்றார்.
இன்று 02.11.2022 ஹைதராபாத்தில் தொடங்கிய நடைபயணத்தில் பங்கேற்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சார்பிலும், மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பிலும் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள், ராகுல் காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
காலை 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை , 2 மணிநேரம் ராகுல்காந்தி அவர்களுடன் 9 கி.மீ நடைபயணம் சென்றார். அப்போது, கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவருடன் உரையாடிக் கொண்டே நடந்து சென்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி ஜோதிமணி அவர்களும் உடன் நடந்தார்.
காலை 8 மணி அளவில் நடைபயணம் முடிந்த பிறகு, ராகுல்காந்தி அவர்களுடன், துரை வைகோ காலை உணவருந்தினார். ராகுல்காந்தி அவர்கள் ஐந்து நிமிடத்தில் காலை உணவை முடித்துக் கொண்டார். அதன்பிறகு, அவருடன் 45 நிமிடங்கள் துரை வைகோ உரையாடினார்.
துரை வைகோ அவர்களைப் பற்றியும், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு செய்துகொண்டு இருந்த பணிகளைப் பற்றியும் விசாரித்தார். கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் உடல்நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார்.
தமிழக அரசியல் நிலவரம், தேசிய அரசியல் உள்ளிட்டவைகள் குறித்து இருவரும் உரையாடினார்கள். தற்போது, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி வரும் வலதுசாரி அரசியலின் பேராபத்து குறித்து, துரை வைகோ தனது கருத்தை ராகுல் காந்தி அவர்களிடம் தெரிவித்தார்.
வலதுசாரி அரசியலை வீழ்த்துவதற்கு நடைமுறையில் உள்ள சவால்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். கடந்த பத்து வருடங்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்ததற்குப் பிறகு, வலதுசாரி அரசியல் கட்சிகள் வேகமாக வளர்ந்து உள்ளன. நம்மைப் பொருத்தவரை நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆனால், வலதுசாரிகள் சாதி, மத உணர்வுகளை மக்களிடம் தூண்டி அதன் மூலம் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களை வீழ்த்துவது ஒரு சவாலான பணி என்று அவரிடம் துரை வைகோ தெரிவித்தார்.
இலங்கை முன்னாள் அதிபர் கொடியவன் இராஜபக்சே குறித்து பேச்சு எழுந்த போது, அவர் மிக மோசமான கொடுங்கோலன் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். உடனே அவரிடம் கைகுலுக்கி அவரது கருத்தை துரை வைகோ ஆதரித்தார்.
பிரேசில் தேர்தலில் போல்சார்னோவின் தோல்வி குறித்து தனது கருத்தை ராகுலிடம் பகிர்ந்து கொண்டார். ஹிட்லராக இருந்தாலும், இராஜபக்ஷேவாக இருந்தாலும், ட்ரம்பாக இருந்தாலும், போல்சர்னோவாக இருந்தாலும் வலதுசாரி சிந்தனை உடையவர்கள், இனவாத, மதவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் உலகத்தில் வீழ்ந்து போன வரலாறையும்,
இந்தியாவில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தாலும் கடைசி நம்பிக்கையாக தகர்க்க முடியாத கற்கோட்டையாக தெற்கே தமிழகம் தான் இருக்கிறது என்றும் துரை வைகோ அவர்களிடம் ராகுல்காந்தி அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தந்தை பெரியாரை போன்றே பகுத்தறிவு கருத்துக்களை அவர் காலத்திற்கு முன்பே பரப்பி வந்த சிந்தனையாளர்கள் குறித்தும் ராகுல்காந்தி அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
அண்ணல் காந்தியார் தொடங்கி நாட்டின் ஒற்றுமைக்காக பல தலைவர்கள் நடைபயணம் சென்று மக்களை அணி திரட்டி இருக்கின்றார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். இன்று, மதவாத சக்திகள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து பிளவுபடுத்தி வரும் நிலையில், இந்திய நாட்டில் எட்டுத் திக்கிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வரும் காங்கிர° பேரியக்கத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் ராகுல்காந்தி அவர்களின் ‘ஒற்றுமை பயணம்’ வெற்றி பெற துரை வைகோ அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். இந்நிகழ்வில், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் ஆகியோர் பங்கேற்றார்.