FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடுகளின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே இந்தத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.

முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டுவந்தபோது இதனால் ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னது. நடைமுறையில் உள்ள 50% இட ஒதுக்கீட்டுக்குக் கூடுதலாகவே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதற்கு மாறாக இப்போது வங்கி அதிகாரிகளுக்கான தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவைக் குறைத்து முன்னேறிய சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 3, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நான்கு பொதுத் துறை வங்கிகளுக்கான 1417 அதிகாரிகள் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 6% குறைத்து 21 சதவீத இட ஒதுக்கீடும் ; எஸ்சி பிரிவினருக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் 2% ஐக் குறைத்து 13 சதவீத இட ஒதுக்கீடும்; எஸ்டி பிரிவினருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 1.5 சதவீதத்தைக் குறைத்து 6 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி குறைக்கப்பட்டதால் கிடைத்த 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய துரோகச் செயலாகும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து சட்டவிரோதமாகத் தேர்வு நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டுப் புதிதாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுடைய இட ஒதுக்கீட்டு உரிமையில் பாஜக அரசு கைவைத்தால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்