சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, கொடையாளர், தானம் பெறுபவர் ஆகிய இருவருமே ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பி பாசிடிவ் ரத்த வகையைக் கொண்ட 39 வயதான ஆணுக்கு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா காலத்தில் அதே ரத்தப்பிரிவைச் சேர்ந்த கொடையாளரை தேடி நேரத்தை செலவழித்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உருவானது. எனவே, ஏ1 பாசிடிவ் வகை ரத்தம்கொண்ட அவரது மனைவியின் சிறுநீரகத்தையே பொருத்த மருத்துவர்கள் முடிவுசெய்தனர். ஆறு மருத்துவர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
நோயாளி உடல்நிலை, ஐந்து நாட்களாக சீராக இருப்பதாகவும், ஒரு நாளுக்கு 5 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவுக்கு சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாகவும் மருத்துவமனையின் சிறுநீரகத் துறை தலைவர் வெங்கட்ராமன் தெரிவித்தார். தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 41 வயது ஆணுக்கு வேறு ரத்தப் பிரிவைச் சேர்ந்த சிறுநீரகம் பொருத்தப்பட்டதாகவும் மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவித்தார். பொதுவாக, வேறு ரத்தப் பிரிவைச் சேர்ந்த புதிய உறுப்பை பொருத்தும்போது, அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதால், அந்த உறுப்பை உடல் நிராகரிக்கலாம் என ராயப்பேட்டை மருத்துவமனை இயக்குநர் மணி தெரிவிக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முன்பே ஸ்டீராய்டு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்திவிட்டு சிகிச்சை அளித்தால் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறினார். தனியார் மருத்துவமனைகளில் 20 லட்சம் ரூபாய் வரை செலவுபிடிக்கும் அறுவை சிகிச்சையை, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து முடித்துள்ளதாகவும் மருத்துவர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.